ஈரோடு ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 4 நாளாக நடந்த ஐ.டி. ரெய்டு நிறைவு..!!

ஈரோடு: ஈரோட்டில் அரசின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ஸ்ரீபதி அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஸ்ரீனிவாசன், சேகர், பூபதி ஆகியோர் இயக்குனராக பணியாற்றி வருகின்றனர். கட்டுமானம் மட்டுமின்றி போக்குவரத்து, ரியல் எஸ்டேட், மசாலா தயாரிப்பு, கல்குவாரி, திருமண மண்டபம் என பல்வேறு தொழில்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஸ்ரீபதி அசோசியேட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், இயக்குனர்களின் வீடுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 2வது நாளாக நடைபெற்ற சோதனையில் 16 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்றைய தினம் (3வது நாள்) நடைபெற்ற சோதனையில் மேலும் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 நாட்களாக 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்நிறுவனம் அரசின் ஒப்பந்தங்கள் பெறுவதோடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் கட்டுமான ஒப்பந்தங்கள் பெற்று தொழில் செய்து வரும் நிலையில், அங்குள்ள முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 4வது நாளாக நடைபெற்ற சோதனையானது இன்று நிறைவடைந்திருக்கிறது. நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>