டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அவலத்தை பொறுக்க முடியவில்லை... சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லி : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அவலத்தை பொறுக்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு சீக்கிய மதகுரு ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 3 வாரங்களை தாண்டியுள்ள நிலையில், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஷந்துராம் என்ற சீக்கிய மதகுரு, சிங்கு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வந்துள்ளார். பின்னர் போராட்டக் களத்திற்கு அருகே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை என்று பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டு இருந்தது. இதனிடையே டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 22வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைகளில் ஆடிப்பாடி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

தற்கொலை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி பிடிவாதத்தை கைவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரச்சனைக்கு தீர்வு காண குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்த யோசனையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

Related Stories:

>