×

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.312 கோடி என்ன ஆனது?: விசாரணை நடத்த திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை: சென்னையில் புயலால் பாதிக்கப்பட்டிருந்த 26 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.312 கோடி  என்ன ஆனது? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் நடத்தப்பட்ட பொதுமக்களுடனான சந்திப்பின்போது பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களை சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் சென்னை தென் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை வேலு ஆகியோர் அடங்கிய குழுவினர், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் நேற்று வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து  மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
 சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், தியாகராய நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல்    உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் இன்னுமும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் குடிநீர் வசதியை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியுள்ள பொதுமக்களின் மனுக்கள் ஆணையர் பிரகாஷிடம் அளிக்கப்பட்டது.
 புயலின்போது சென்னையில் பாதிக்கப்பட்ட 26 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஒதுக்கிய ரூ.312 கோடி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு பணத்தில் வழங்கப்பட்ட உணவை, அதிமுகவினர் வழங்குவது போல அக்கட்சியினர்  விளம்பரப்படுத்தியது குறித்து முறையிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், “மழை காலங்களில் பாதிக்கப்படும் செம்மஞ்சேரி, ஒக்கியம் இடையே கால்வாய் அமைக்க வேண்டும். தேர்தல் என்றாலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் மக்களை சென்று சந்திக்கும் இயக்கமாக திமுக திகழ்கிறது. மக்கள் சந்திப்பு பயணங்களில் திமுக ஆட்சியில் அமைவது உறுதியாக தெரிகிறது. யார் அரசியலுக்கு வந்தாலும் போனாலும் எந்த பாதிப்பும் கவலையும் இல்லை. 234 தொகுதிகளும் திமுக வெற்றி பெறும். ரஜினி, கமல் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை”  என்றார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்களின் புகார் மனுக்களை திமுக குழுவினர் அளித்தனர்.



Tags : storm ,DMK ,Ma Subramanian , What happened to the ₹ 312 crore allocated to provide food to the people affected by the storm ?: DMK MLA Ma Subramanian to conduct inquiry
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...