×

ஐ.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்களில் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்: துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: இடஒதுக்கீடு பிரிவில் வருவோர் அனைவருமே தகுதி இல்லாதவர்கள்” என்று கங்கணம் கட்டிக் கொண்டு முத்திரை குத்துவதும், அந்த மனப்பான்மையில் மத்திய அரசு செயல்படுவதும் நாட்டின் 80 சதவீத மக்களை அவமதிப்பதாகும். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும்” என்றும், “ஐ.ஐ.டி. நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்” என்றும் மத்திய கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.ஐ.டி.களிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாய இளைஞர்களுக்கு உள்ள 49.50 சதவீத இடஒதுக்கீட்டில் 10 சதவீதத்தைக் கூட நிரப்பாத மத்திய பாஜ அரசு - தற்போது இருக்கின்ற இடஒதுக்கீடு முறையையும் நீக்கிவிடத் துடிப்பது சமூகநீதியின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல். அதை நாட்டில் உள்ள 80 சதவீத மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே, ஐ.ஐ.டி. ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி விட்டு - ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் - உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடு பொருந்தும் என்று உடனடியாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்றும் பிரதமர்  நரேந்திர மோடி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : IITs ,Duraimurugan ,universities , IITs should implement 49.5 per cent reservation in central universities: Duraimurugan insists
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!