×

ரேஷனில் கூடுதல் அரிசி வழங்கியது, எல்இடி பல்புகள் வாங்கியதில் முறைகேடு அமைச்சர்கள் மீது வழக்கு பதிய கோரி திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஐகோர்ட்டில் மனு: விசாரணை ஜன.6க்கு தள்ளிவைப்பு

சென்னை: பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் படி, கொரோனா ஊரடங்கு காலத்தில்,   குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ வழங்காமல் குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கப்பட்டது. மீதமுள்ள அரிசி உணவுத்துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாகவும் முதல்வர் மற்றும் உணவு அமைச்சருக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு லஞ்ச ஒழிப்பு இயக்குனரிடம் புகார் அளித்தார்.

 இதேபோல், கிராமங்களில் தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீதும் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தனது புகார்களை பொதுத்துறை செயலருக்கு அனுப்பி வைத்துள்ளதால்,  ஆளுநரின் ஒப்புதலை பெற்று வழக்கு பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பாவு சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் வி.அருண் ஆஜராகினர்.

அப்போது, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த  பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற அனுப்பி வைக்க வேண்டும் என்று 2018ம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ள செயலாளர்,  அமைச்சர்களுக்கு எதிராக செயல்பட மாட்டார். எனவே, அப்பாவு கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய ஆளுநரின் ஒப்புதலைப் பெறுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.மேலும், 2018 அரசாணையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்களின் மீதான விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Tags : MLA ,DMK ,ministers ,purchase ,hearing , Ex-DMK MLA files case against ministers for providing extra rice in ration, purchase of LED bulbs
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம்