நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை சென்னை, திருப்பூர் எலைட் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

* கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல்

* இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தியதும் விசாரணையில் அம்பலம்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் 83 எலைட் விற்பனை நிலையங்கள் அமைத்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 31 எலைட் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த எலைட் கடைகள் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அடுத்தடுத்து வருவதால் டாஸ்மாக் பார்களில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் இடைத்தரகர்கள் டாஸ்மாக் மேலாளர், கண்காணிப்பாளர்கள் துணையுடன் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைப்பதாக ரகசிய தகவல் வெளியானது. மேலும் ரூ.20 முதல் 40 வரை கூடுதல் விலை வைத்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மது பிரியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் அளித்தனர். அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி லவகுமார் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீசார் ஒரே நேரத்தில் அதிக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் கடைகளான அமைந்தகரை, அயனாவரம், வேளச்சேரி பீனிக்ஸ்மால், அல்சா மால், எழும்பூர் பகுதிகளில் உள்ள எலைட் டாஸ்மாக்கடைகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.

விடிய விடிய நடந்த இந்த சோதனை நேற்று காலை 6 மணி முடிவடைந்தது.இந்த சோதனையின் போது, டாஸ்மாக் எலைட் கடைகளில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதன்படி மது விற்பனையை காட்டிலும் அயனாவரத்தில் ரூ.25 ஆயிரம் குறைவாகவும், அமைந்தகரையில் ரூ.19 ஆயிரம் குறைவாகவும் இருந்துள்ளது. இது குறித்து எலைட் ஊழியர்களிடம், அவர்கள் விற்பனை பணத்தை கையாடல் செய்தார்களா அல்லது மதுபானங்களை வெளிநபர்களிடம் கொடுத்து அதிக தொகைக்கு விற்பனை செய்கின்றனரா விசாரணை நடத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 5 எலைட் கடை மற்றும் பார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், வர்த்தக நகரமான திருப்பூரிலும் நேற்று முன்தினம் இரவு எலைட் மதுபான விற்பனை கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிக் பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலைட் கடையில் கணக்கில் வராத ரூ.50,520 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் வழக்கத்தை விட அதிகளவில் மதுபானங்கள் இறுப்பு வைத்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் எலைட் கடைகள் அனைத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறைத்துறை பெண் டிஐஜி வீட்டில் ரெய்டு

வேலூர் சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஜெயபாரதி. இவரது கணவர் முருகன் சென்னையில் டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் வேலூர் தொரப்பாடி- பாகாயம் சாலையில் ஆப்காவில் உள்ள டிஐஜி ஜெயபாரதி வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் நேற்று பகல் 1 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்த தொடங்கினர். மேலும் வீட்டில் இருந்த டிஐஜி ஜெயபாரதியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>