×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் திமுகவில் இணைந்தார்: தேமுதிகவின் நோக்கம் திசை மாறுவதால் விலகியதாக பேட்டி

சென்னை: தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் திமுகவில் தன்னை இணைந்து கொண்டார். அப்போது வடசென்னை மாவட்ட திமுக பொறுப்பாளர் இளைய அருணா, செய்தி தொடர்பு மாநில இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இணைந்த மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக தொடங்கப்பட்ட நோக்கம் திசை மாறி செல்கிறது. அதனால் தான் அக்கட்சியில் இருந்து விலகி விட்டேன். நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடிய கோரிக்கையை கூட்டணிக்காக முன் வைக்காமல், 41 சீட் கொடுத்தால் மட்டும் கூட்டணி வைப்போம் என்கிறார்கள். இதனால் தான் தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

நான் திமுகவில் இணைந்திருப்பது ஒரு தொடக்கம் தான். இனி வரும் நாட்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் சேருவார்கள். தேமுதிக கட்சியில் நடைபெறக் கூடிய எந்த ஒரு செயல்பாடும் கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு தெரிந்து நடக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தேமுதிக கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Mathivanan ,Temutika ,MK Stalin ,DMK , Temujin District Secretary Mathivanan joins DMK in the presence of MK Stalin
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...