சிறந்த பள்ளிகள் உ.பியிலா.. டெல்லியிலா... உபி கல்வி அமைச்சருடன் 22ல் சிசோடியா விவாதம்: லக்னோ செல்கிறார்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 2022ல் நடைபெற உள்ளது. கல்வி மற்றும் மின்சார விநியோகத்தில் மிகவும் பின்தங்கி உள்ள உத்தரப்பிரதேசத்தில் டெல்லி மாடல் ஆட்சியை அறிமுகப்படுத்த வேண்டி, வரும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அங்கு போட்டியிடும் என டெல்லி முதல்வரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார். அதனால் உச்சகட்ட வெறுப்படைந்த உத்தரப்பிரதேச மாநில கல்வி அமைச்சர் சதீஷ் த்விவேதி, ‘‘உத்தரப்பிரதேசத்தில் எல்லாமே சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது. எதுவும் தெரியாமல் பேசும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான சிசோடியாவும் உத்தரப்பிரதேசம் வருகை புரிந்து, இங்குள்ள பள்ளிகளின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பை பார்த்து தெரிந்து கொண்டு என்னுடன் விவாதம் நடத்த தயாரா’’, என சவால் விட்டிருந்தார்.

உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷுக்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களிடம் டெல்லி கல்வி அமைச்சர் சிசோடியா கூறியிருப்பதாவது: பள்ளிகள் விவகாரத்தில் இரு மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன். வரும் செவ்வாய்க்கிழமை லக்னோ வருகிறேன். அரசு பள்ளிகளில் சிறப்பாக கருதும் 10 பள்ளிகளை நீங்களே தேர்வு செய்யுங்கள். கடந்த 4 ஆண்டுகளில் அந்த பள்ளிகள் செயல்பட்ட விதம், மாணவர்கள் மேம்பட்டனரா, தேர்வு முடிவுகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளதா, போட்டித்தேர்வுகளை சந்திக்கும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு ஏற்பட்டதா என பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வேன். மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக ஆய்வு செய்த பின்னர், உங்களது சவாலை ஏற்கும் விதமாக உடனடியாக விவாதிக்கவும் தயாராக உள்ளேன். இவ்வாறு சிசோடியா கூறியுள்ளார்.

முன்னதாக டிவிட்டர் வலைதளத்தில் கெஜ்ரிவால் பதிவேற்றிய தகவலில், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் டெல்லி மாடலை உத்தரப்பிரதேச மாநிலத்தின் மூலை முடுக்குகளிலும் பாராட்டி பேசுகின்றனர். அம்மாநிலத்தில் கொரோனா மாதிரி சோதனைகளை போலியாக அறிவித்த சுகாதார துறையின் நடவடிக்கையையும் அங்குள்ள மக்கள் கிண்டலடித்தனர். ஆம் ஆத்மி அப்படி நடந்து கொள்ளாது. போலி மாதிரி அறிக்கைகளை இந்த தகவலுடன் இணைத்துள்ளேன் மேலும், சக அமைச்சரான சதீஷின் சவாலை ஏற்று விவாதத்திற்காக மணீஷ்ஜி வரும் 22ல் லக்னோ வருகிறார்’’, என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>