மேலவை தலைவர் பதவி விவகாரத்தில் பாஜ-காங்கிரஸ் இடையே கடும் போட்டி: சட்ட போராட்டத்துக்கு தயாராகி வரும் பிரதாப் சந்திரஷெட்டி

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை தலைவர் விவகாரத்தில் ஆளும் பாஜ மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையில் தற்போது தலைவராக இருக்கும் பிரதாப்சந்திரஷெட்டி சட்ட போராட்டத்தை கையில் எடுக்க தீர்மானித்துள்ளார். மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 75 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாஜ-31, காங்கிரஸ்-29, மஜத-14 மற்றும் சுயேச்சை ஒன்று என்ற அளவில் பலம் உள்ளது. சட்டமேலவை தலைவர் நியமனம் செய்வதில் மூன்று கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலமில்லை. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப்சந்திரஷெட்டியும் துணைத்தலைவராக மஜதவை சேர்ந்த தர்மேகவுடாவும் பொறுப்பேற்றனர்.

மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்த பின் காங்கிரஸ்-மஜத கூட்டணியும் முறிந்தது. இதை பயன்படுத்தி மஜத ஆதரவுடன் மேலவை தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்ட பாஜ, மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை கடந்த நவம்பர் 25ம் தேதி கொடுத்தனர். கடந்த 7ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடந்த பேரவை மற்றும் மேலவை குளிர்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜ உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் 10ம் தேதி கூட்டத்தொடர் முடிந்த நாளிலும் தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கவில்லை.

இதனால் பாஜ உறுப்பினர்கள் ஆளுநர் வி.ஆர்.வாலா உதவியை நாடும் வகையில் அவரை நேரில் சந்தித்து சிறப்பு மேலவை கூட்டம் 15ம் தேதி நடத்த அனுமதி பெற்றார். அதன்படி நேற்று முன்தினம் மேலவை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் பாஜ மற்றும் மஜத உறுப்பினர்கள் இடையே நடந்த மோதல் காரணமாக மேலவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலவை கூட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் ஆளுநரிடம் தனி, தனியாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகள் ஆலோசனை: இதனிடையில் பிரதாப்சந்திரஷெட்டியை பதவியில் இருந்து நீக்க பாஜ மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதை சகித்து கொள்ள முடியாததால், வேறு  யுக்தியை கையாண்டு அவரை பதவியில் இருந்து நீக்குவது என்பது குறித்து யோசித்து வருகிறது. இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டபோது, சட்ட அமைச்சர் மாதுசாமி, உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை உள்பட சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தும் விஷயத்தில் பாஜ தீவிரமாக ஆலோசனையில் உள்ளது.

அதே சமயத்தில் ஆளும் கட்சிக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்து காட்டும் வகையில் கடைசி நிமிடம் வரை போராட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தால் மனமுடைந்துள்ள மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் தெரிவித்தார். ஆனால் அவசரப்பட்டு ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியதால் ராஜினாமா முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்.

இதனிடையில் துணைமுதல்வர் கோவிந்த கார்ஜோள், அமைச்சர் மாதுசாமி ஆகியோர் ஆளுநரை சந்தித்து சிறப்பு மேலவை கூட்டம் நடத்த உத்தரவிடும்படி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆளுநர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எதுவும் செய்ய முடியாது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தீர்மானிப்பதாக கூறியுள்ளார். ஆளும் பாஜ தரப்பில் சட்ட போராட்டம் எடுக்கும் தகவல் கிடைத்துள்ளதால், பிரதாப் சந்திரஷெட்டியும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். அவரும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் அரசு தலைமை வக்கீல்கள் கருத்து பி.வி.ஆச்சார்யா: மேலவை விவகாரத்தில் தலைவர், துணைத்தலைவர் இருவருக்கும் சம அதிகாரம் உள்ளது. தலைவரின் அனுமதி பேரில் துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தலாம். ஆனால் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளபோது, துணைத்தலைவர் அவையை வழி நடத்தும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இக்கட்டான சமயத்தில் அவையை யார் நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அவை விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனது கருத்துப்படி மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளபோது, அந்த தீர்மானத்தை விவாதித்திற்கு எடுத்து கொள்ளாமல் நிராகரிக்கும் உரிமை தலைவருக்கு கிடையாது. துணைத்தலைவரே அவை நடத்தும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தலைவர் அவைக்கு வந்ததும், அவையை ஒத்தி வைத்ததும் சரியான சட்ட வழிமுறையல்ல. மேலும் ஆளுநராக இருப்பவர் இரு அவையின் உறுப்பினர் என்பது பலருக்கும் தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மேலவை தலைவருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது என்றார்.

அசோக் ஹாரனஹள்ளி: சாமானிய கூட்டமாக இருந்தாலும் மேலவை தலைவரின் அனுமதி பெறாமல் அவரது இருக்கையில் துணைத்தலைவர் அமர முடியாது. ஆனால் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் என்பதால், துணைத்தலைவர் அவை நடத்தும் அதிகாரம் பெற்றுள்ளார். மேலும் தனக்கு எதிராக வழக்கில் தானே நியாயத்தை தீர்மானிப்பது தவறானது. இது தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு கவுரவம் கொடுக்காது. நேற்று முன்தினம் மேலவை கூட்டத்தொடரில் இருந்தது ஒரே அஜண்ட்டா மட்டுமே. அது தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றே. அதன் மீது நடத்தப்படும் விவாதத்தை துணைத்தலைவர் தான் நடத்த முடியும் என்றார்.

ரவிவர்மகுமார்: மேலவை தலைவராக இருப்பவர், தான் இருக்கையில் அமர மாட்டேன் என்று கூறினால் மட்டுமே துணைத்தலைவர் இருக்கையில் அமர முடியும். அவையை யார் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ளது. நெருக்கடியான கட்டத்தில் துணைத்தலைவர் அவையில் இல்லாமல் இருந்தாலும் அவரை வரவழைத்து அமர்த்த வேண்டும். அவர் அமர்ந்த பின் தான் அவை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும். நேற்று முன்தினம் நடந்த அவையில் ஒரே அஜண்டா பசுவதை தடை சட்ட மசோதா மட்டுமே. நம்பிக்கையில்லா தீர்மானம் அவை நடவடிக்கை குறிப்பில் இடம்பெறவில்லை என்றார்.

* பதவி விலக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

மாநிலத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் பிரதிநிதியாக ஆளுநர் இருந்தாலும் பேரவை மற்றும் மேலவையில் நடக்கும் விவகாரங்களில் குறிப்பட்ட எல்லை கோட்டுக்குள் மட்டுமே அவரால் தலையிட முடியும். பாஜ உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்று ஒருநாள் சிறப்பு மேலவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி வழங்கினார். மீண்டும் சிறப்பு மேலவை கூட்டம் நடத்த அனுமதி வழங்க ஆளுநரால் முடியாது. ஆகவே அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை மற்றும் மேலவை கூட்டத்தொடரில் மட்டுமே பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த முடியும். மாநிலத்தில் பாஜ ஆளும் கட்சியாக இருப்பதாலும் ஆளுநர் அதே கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அழுத்தம் கொடுத்து மேலவை தலைவரை நீக்க வலியுறுத்தினாலும் மேலவை தலைவர் பதவியில் இருந்து பிரதாப்சந்திரஷெட்டியை நீக்குவதோ அல்லது ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தவோ முடியாது. வேண்டுமானால் ஆதரவு பலத்தை நிரூபிக்கும்படி ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.

Related Stories:

More