கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆர்டிஐ ஆர்வலரிடம் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை: மன்னிப்பு கேட்டு திரும்ப கொடுத்தது

பெங்களூரு: கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்ற ஆர்டிஐ ஆர்வலரிடம் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், மன்னிப்பு கேட்டு கட்டணத்தை திரும்ப கொடுத்துள்ளது. பெங்களூருவில் வசிப்பவர் டி.நரசிம்மமூர்த்தி, ஆர்டிஐ ஆர்வலராக இருக்கும் அவர் பல்வேறு விஷயங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கோவிட்-19 பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி ஆணையரின் சிபாரிசு பேரில் சுவர்ணா ஆரோக்கிய டிரஸ்ட் இலவச சிகிச்சை திட்டத்தில் சேஷாத்திரிபுரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அக்டோபர் 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 20ம் தேதி வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமாகிய பின் வீட்டிற்கு அனுப்பினர். டிஸ்சார்ஜ் செய்த நாளில் சிகிச்சை கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டபோது, மாநகராட்சி இலவச கோவிட் சிகிச்சை திட்டத்தில் சேர்ந்துள்ளதால், கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று நரசிம்மமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்து கூறியும் கேட்காமல் ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலித்தபின் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர், மாநில தலைமை செயலாளர் ஆகியோருக்கு புகார் கொடுத்ததுடன் அதன் நகலை பிரதமர் மோடிக்கும் அனுப்பி வைத்தார். பின் அப்பல்லோ மருத்துவமனை எதிரில் தனி மனிதராக தர்ணா போராட்டமும் நடத்தினார். இதனிடையில் நரசிம்மமூர்த்தி நடத்திய சட்ட போராட்டத்திற்கு பணிந்த தனியார் மருத்துவமனை டி.நரசிம்மமூர்த்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``தாங்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக கூறியுள்ளதுடன் தங்களிடம் வசூலித்த ரூ.10 ஆயிரமும் பின் அபராதமாக ரூ.1 என்ற வகையில் ரூ.10,001 காசோலை மூலம் வழங்குவதாக’’ தெரிவித்துள்ளது.

* போராடியது ஏன்?

நரசிம்மமூர்த்தி கூறும்போது, கொரோனா தொற்று பாதித்து மாநில அரசு அல்லது மாநகராட்சியின் சுவர்ணா ஆரோக்கிய டிரஸ்ட் இலவச திட்டத்தில் சிகிச்சை பெற்றவர்களிடம் தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலித்து இருந்தால் அதை திரும்ப பெற வசதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சட்ட போராட்டம் கையில் எடுத்ததாக கூறினார்.

Related Stories:

More
>