×

சென்னை பல்கலைக்கழக ஊழியர், மனைவியை கத்திமுனையில் மிரட்டி 30 சவரன், பணம் கொள்ளை:ஸ்ரீபெரும்புதூர் அருகே முகமூடி ஆசாமிகள் அட்டகாசம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பல்கலைக்கழக ஊழியர், மனைவியை கத்திமுனையில் மிரட்டி 30 சவரன், பணத்தை முகமூடி ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே பட்டுமுடையார்குப்பத்தை சேர்ந்தவர் சண்முகம் (57). சென்னை பல்கலைக்கழக ஊழியர். இவரது மனைவி சுகுணா (50). இவர்களது மகன், குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார். பட்டுமுடையார்குப்பத்தில், சுமார் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, பண்ணை வீடு கட்டிய சண்முகம், மனைவியுடன்  தனியாக வசிக்கிறார். வீட்டின் முன்பகுதியில் செயற்கை நீரூற்று, தோட்டம் என அலங்கரித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி சாப்பிட்டு முடித்து தூங்கினர். நேற்று அதிகாலை 2 மணியளவில், திடீரென சத்தம் கேட்டது. இதனால், தூக்கத்தில் இருந்த சண்முகம், சட்டென எழுந்து பார்த்தார்.

அப்போது, வீட்டில் மர்மநபர்கள் நடமாடுவதும், மின்விளக்கை அணைத்து அணைத்து போடுவதும் தெரிந்தது. உடனே கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, முகமூடி அணிந்த 4 பேர், கைகளில் கத்தி, அரிவாளுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த கும்பலில் ஒருவன், சண்முகத்தின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட கூடாது, இல்லாவிட்டால் குத்திவிடுவேன்’’’’ என மிரட்டியுள்ளான். சத்தம் கேட்டு சுகுணா வந்தார். அவரது கழுத்திலும் கத்தியை வைத்து மர்மநபர்கள் மிரட்டினர்.
பின்னர் அவர்களது கழுத்தில் இருந்த நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த நகை என 30 சவரன், மற்றும் பணத்தை எடுத்தனர். தொடர்ந்து, 2 பேரையும் வீட்டுக்குள் தள்ளிவிட்டு கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு மர்மநபர்கள் தப்பினர்.

இதையடுத்து சண்முகம், சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chennai University ,Assamese ,Sriperumbudur , Chennai University employee intimidates his wife with a knife
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு