பிரதமர் மோடியை கண்டித்து தினம் ஒரு விவசாயி தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்ணு பேட்டி

திருச்சி: பிரதமர் மோடியை கண்டித்து டெல்லி செல்லும் விவசாயிகள் அங்கு தினம் ஒருவர் தற்கொலை போராட்டம் நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து வீட்டு சிறை வைத்தனர்.

போலீசார் கெடுபிடியில் இருந்து தப்பி  மதுரை விமான நிலையம் சென்ற அய்யாக்கண்ணு தலைமையிலான 5 பேர், டெல்லி சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று திருச்சி திரும்பிய அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லியில் உணர்வுபூர்வமான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

40கி.மீ சுற்றளவு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் தருவேன் என கூறி பிரதமர் மோடி வெற்றி பெற்றார். ஆனால் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார். எனவே மோடியை கண்டித்து திருச்சியில் இருந்து 30 விவசாயிகள் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெற உள்ளது. இதில் முடிவு எடுத்து டெல்லி செல்லும் விவசாயிகள், மோடியை கண்டித்து அங்கு தினம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வோம்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: