×

செயலற்ற நிலையில் மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு வீரர்கள் தேர்வில் அரசியல்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வருத்தம்

மதுரை: மதுரை, மூன்றுமாவடியைச் சேர்ந்த பரசுராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ குருநாதன் என்ற மாற்றுத்திறனாளி வீரர் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த பணியாளராக உள்ளார்.  இவரைப்போல சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்ற பலர் உரிய வேலைவாய்ப்பின்றி சிரமத்தில் உள்ளனர். அவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ‘‘மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இவற்றைப் பெற அவர்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவில்லை என்றாலும், உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் குறித்த விவரங்களையாவது முழுமையாக தெரிவிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அப்படி செயல்படுவதாகத் தெரியவில்லை. செயலற்ற நிலையில் தான் உள்ளது. விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக  கிரிக்கெட்டில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் (நடராஜன்) தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள் சார்ந்துள்ளவர்களையும், அவற்றை பற்றி முழுமையாக அறிந்தவர்களையும், விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர்களையும் அதிகாரிகளாக நியமிப்பது குறித்து, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.



Tags : Inactive Development Authority Politics in Athlete Selection: ICC Branch Judges Upset
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்...