கட்டுமான நிதி கைக்கு வரவில்லை எய்ம்ஸ்க்கான இடத்தையும் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை: ஆர்டிஐயில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

மதுரை:   மதுரை அருகே தோப்பூரில் 180 ஏக்கரில், ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 2019, ஜனவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிக்கா) இம்மருத்துவமனைக்கான நிதியை கடனாக வழங்குகிறது. இத்திட்டம் 2022க்குள் முடிக்கப்பட வேண்டும். முதல் கட்ட திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தயாரித்து இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஜிக்காவிடம் சமர்ப்பித்தன. ஆனால் ஆய்வு நடத்தி முடித்தும் திட்டத்திற்கான நிதியை கூட்டுறவு முகமை இதுவரை வழங்கவில்லை. மருத்துவமனை அமையும் தோப்பூர் பகுதியில் தற்போது வளாக சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி மட்டுமே நடந்து வருகிறது.  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச்சட்டம்) மூலம் மத்திய அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இக்கேள்விகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பதிலளிக்கப்பட்டது.

அதில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக இந்தியா, ஜப்பான் இடையே டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அடுத்த 45 மாதங்களில் பணி நிறைவு பெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கூடுதல் விபரங்கள் கேட்டிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ‘ரூ.1,264 கோடியில் அமையும் மதுரை எய்ம்ஸ்க்கு கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால்தான் கடன் விவரம் தெரிவிக்கப்படும். கடன் கிடைத்த பிறகுதான் கட்டுமானப் பணி துவங்கும். இன்றைய நிலவரப்படி எய்ம்ஸ்க்கான நிலத்தை மத்திய அரசிடம், தமிழக அரசு ஒப்படைக்கவில்லை’ என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, ‘‘எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது துவங்கும், முடிவடையும் காலம், கடன் திட்டத்தின் தற்போதைய நிலை, மருத்துவம், நர்சிங் படிப்பு எப்போது துவங்கும்? எய்ம்ஸ்க்கு மத்திய, மாநில அரசுகள் அதிகாரிகளை நியமித்துள்ளதா? எய்ம்ஸ் மாதிரி வரைபடம் உள்ளிட்ட 17 கேள்விகள் கேட்டிருந்தேன். இதில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. முதலில் டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்த மத்திய அரசு, இம்முறை அதுபற்றி எந்த உத்தரவாதமும் தரவில்லை. இதனால் எப்போது கடன் கிடைக்கும். எப்போது கட்டுமான பணி துவங்கும் என்பது தெரியவில்லை’’ என்றார். இத்தகவல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Related Stories:

More
>