×

இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி பொன்விழா ஜோதியை ஏற்றி டெல்லியில் பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் நிரந்தர ஜோதியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். கடந்த 1971ம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானுடன் நடந்த போரில், இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. வங்கதேசம் உருவாக இந்த வெற்றி வழிவகுத்தது. 2வது உலகப்போருக்கு பின் இந்த போரில்தான் பாகிஸ்தானை சேர்ந்த அதிக அளவிலான ராணுவ வீரர்கள் சரண் அடைந்தனர். இந்நிலையில், இந்த போர் வெற்றியின் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நிரந்தர பொன்விழா ஜோதியை பிரதமர் மோடி நேற்று ஏற்றி வைத்தார். பின்னர், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொன்விழா ஆண்டு நினைவு சின்னத்தை வெளியிட்டார்.

நான்கு வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு, அவை 1971ம் ஆண்டு போருக்காக பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் பெற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. மேலும், விருது பெற்றவர்களின் கிராமங்களில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு தேசிய போர் நினைவு சின்னத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த விழாவில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதவுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2 பாக். வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தினமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோர கிராமங்கள், இந்திய நிலைகள் மீது இத்தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினமும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுசாரா  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய  வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அன்றைய பிரதமரால் அண்டை நாடுகள் பீதி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘1971ம் ஆண்டு  பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் வரலாற்று வெற்றியை கொண்டாடும்  தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நமது  ஆயுதபடையின் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். அன்றைய பிரதமரின் திறமையால் அண்டை  நாடுகள் நம் நாட்டின் எல்லைகளை மீறுவதற்காக அஞ்சி நடுங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் இது நடந்தது,’ என கூறியுள்ளார்.



Tags : PM ,India ,Pakistan ,war victory ,Delhi , PM pays tribute to India-Pakistan war victory in Delhi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!