மார்கழி மாத பிறப்பு: திருப்பதி கோயிலில் நாளை திருப்பாவை சேவை தொடக்கம்

திருமலை: மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை திருப்பாவை சேவை தொடங்குகிறது. வைணவ திருத்தலங்களில் பெரும்பாலும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக  ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் தமிழில் சேவை நடப்பது வழக்கம். மார்கழி மாதம் இன்று காலை 6.04 மணியளவில் பிறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை அதிகாலை முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான உயரதிகாரிகள் கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறும்.  ஆனால் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மார்கழி மாதம் இன்று  காலை 6.04 மணியளவில் தொடங்கியுள்ளதால் நாளை அதிகாலை முதல் சுவாமிக்கு சுப்ரபாத சேவைக்கு பதிலாக 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயாரின் திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சுவாமி துயில் எழுப்பப்பட உள்ளது. ஜனவரி 14ம்தேதி வரை திருப்பாவை சேவை ஒரு மாதம் நடைபெறும்.

அதன்பிறகு மீண்டும் ஜனவரி 15ம்தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி துயில் எழுப்பப்படும். தினமும் ஏகாந்த சேவையில் போக சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

₹3.23 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 33,873 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்றிரவு நடந்தது. இதில் மொத்தம் ₹3.23 கோடி காணிக்கை கிடைத்தது. மார்கழி பிறப்பு காரணமாக இன்று ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்தும், இலவச தரிசனம் மூலமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி முடிந்து 10 நாட்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories:

>