×

விளையாட்டு வீரர்கள் தேர்விலும் அரசியல்: இந்திய அணியில் அதிர்ஷ்டவமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு...ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து.!!!

மதுரை: விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் செய்வதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் புதூர் கண்ணேனந்தல் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் 23 வருடங்களாக மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். அதன்மூலம் வெளிநாடுகளில் நடந்த பாரா ஒலிம்பிக் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு  பல வீரர்களை வெற்றிபெற வைத்துள்ளேன்.

இதில் குருநாதன் என்ற விளையாட்டு வீரர் வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேசப் போட்டிகளிலும் தேசிய,  மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளார். அப்படி இருக்க குருநாதன் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். மேலும்,  மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசுப் பணியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள்  உள்ளன. ஆனால் அவற்றைப் பெறுவதற்கு அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது. புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவில்லை எனினும் உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு  குறித்த விவரங்களையாவது முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றார். விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. அதிர்ஷ்டவமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள் சார்ந்து அறிந்த, ஆர்வமுடைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஏனெனில் இது பல ஏழை விளையாட்டு வீரர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் கொண்டது என  தெரிவித்து வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : athletes ,Tamil Nadu ,Indian ,branch judges ,team ,ICC , Politics in the selection of athletes: Luckily, a person from Tamil Nadu was selected in the Indian team.
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்