வாலாஜாபாத்-காஞ்சிபுரம் இடையே மண் புழுதி பறக்கும் பிரதான சாலை: ஆம்புலன்ஸ் திணறல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியே செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை சேதமடைந்து மண் புழுதி பறக்கிறது. இதனால் அவ்வழியே நோயாளிகளை ஏற்றி செல்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் திணறி வருகின்றன.வாலாஜாபாத்தின் மையப் பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி கீழ்ஒட்டிவாக்கம், ராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை, ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியே நாள்தோறும் ஆம்புலன்ஸ் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையில் காஞ்சிபுரம்-வாலாஜாபாத் பிரதான சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உருமாறி மண் புழுதி பறக்கும் சாலையாக பரிதாப நிலைக்கு மாறிவிட்டது. இதைத்  தொடர்ந்து, அந்த சாலை பள்ளங்களில் நெடுஞ்சாலை துறையினர் மண்களை கொட்டி நிரப்பினர். இதனால் காற்று வீசும்போது அந்த மண்துகள்கள் புழுதியை கிளப்புகின்றன.

இதனால் இவ்வழியே செங்கல்பட்டுக்கு அவசர நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ்கள்கூட, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மண் புழுதி பறப்பதால் திணறி வருகின்றன. மேலும், இந்த பிரதான சாலை வழியே செல்லும்  அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அவ்வப்போது விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இச்சாலையின் முக்கியத்துவத்தை கருதி, இங்கு பள்ளங்களை நிரப்பி, தரமான தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: