வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்: வாஷிங்டனில், மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், வாஷிங்டன்னில் நடந்த போராட்டத்தில், ஊடுருவிய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள், வன்முறையை அரங்கேற்றியதுடன், மகாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். காந்தி சிலையின் முகத்தில் போஸ்டர் ஒன்றை ஒட்டினர். சிலை முழுவதும் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தை இந்திய தூதரகம் வலியுறுத்தியது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெலியாக் மெகெனானி கூறுகையில், எந்த சிலையும், நினைவு சின்னங்களையும் அவமரியாதை செய்யக்கூடாது. குறிப்பாக, அமெரிக்காவின் கொள்கைகளான அமைதி, நீதி சுதந்திரம் ஆகியவற்றிற்கு போராடிய மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்படக்கூடாது. மகாத்மா சிலை அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. பலமுறை அவமதிப்பு செய்தது வேதனையளிக்கிறது. அமெரிக்க தலைநகரில், மகாத்மா காந்தி நற்பெயர் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>