×

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

டெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: நாட்டில் தற்போது, 5 கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர்.  மேலும், 5 லட்சம் தொழிலாளர்கள் கரும்பாலைகளிலும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கரும்புகளை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால், சர்க்கரை ஆலைகளில் கூடுதல் இருப்பு உள்ளதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் நிலுவையில் வைக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் சர்க்கரை இருப்பை அகற்ற மத்திய அரசு உதவி வருகிறது.  இதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை செலுத்த வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசு ரூ.3,500 கோடி செலவை ஏற்கவுள்ளது. இந்த நிதியுதவி, சர்க்கரை ஆலைகள் சார்பில், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதன்பின், ஏதாவது நிலுவைத் தொகை இருந்தால், அது சர்க்கரை ஆலைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசின் இந்த முடிவு, 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கும், அவர்களை சார்ந்து உள்ளவர்களுக்கும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் ஐந்து லட்சம் பணியாளர்களுக்கும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union Cabinet ,sugarcane farmers , Farmers, Funding, Union Cabinet, Approval
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...