சிலிண்டர் விலை உயர்வு; ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றிலடிக்கும் செயல்: திருமாவளவன் விமர்சனம்

சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (டிச.16) வெளியிட்ட அறிக்கை:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகல் கொள்ளையைவிட மோசமானது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களைச் சுரண்டும் இந்த விலை உயர்வை மோடி அரசு உடனே திரும்பப் பெற்று பழைய விலைக்கே கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி லிட்டர் 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 86 ரூபாய்க்கு விற்று மக்களைச் சுரண்டுகிறது மோடி அரசு. அது போதாதென்று சமையல் எரிவாயு விலையையும் தன் விருப்பம்போல் உயர்த்தி வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சிலிண்டர் விலை 610 ரூபாயிலிருந்து 660 ரூபாயாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் அது 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மோடி அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.

கரோனா பெருந்தொற்றால் வேலையோ, வருமானமோ இல்லாமல் அவதிப்படும் மக்களிடம் இப்படி அப்பட்டமாகக் கொள்ளையடிக்கும் அரசாங்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி; ஏழை மக்களுக்கு விலை உயர்வு என்பதுதான் மோடி அரசின் தாரக மந்திரமாக உள்ளது.

ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். பழைய விலைக்கே எரிவாயு சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>