×

காலிஸ்தான் கொடியால் காந்தி சிலையை மூடி அவமரியாதை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தது அமெரிக்கா..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 12ம் தேதி வாஷிங்டன் நகரில், இந்திய தூதரகம் முன்பு உள்ள காந்தியடிகள் சிலைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அவமரியாதை செய்தனர். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செய்தி தொடர்பாளர் கெயிலேக் மெக்கன்னே, சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்காக போராடிய காந்தியடிகள் போன்ற தலைவர்களின் சிலைக்கு அவமரியாதை செய்யக்கூடாது என்றார். மேலும், இது மிக மோசமான செயல், எந்த சிலையோ, நினைவு சின்னமோ சேதப்படுத்தப்படக்கூடாது. குறிப்பாக அமைதி, நீதி மற்றும் சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்காக போராடியவர் காந்தியடிகள் என்று புகழாரம் சூட்டினார்.

காந்தி சிலை அவமதிப்பு:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் பல அமைப்புகள் போராடி வருகின்றன. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன்பு சீக்கிய இளைஞர் அமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது திடீரென காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அங்கு இருந்த மகாத்மா காந்தியின் சிலை மீது ஏறி கோஷமிட்டனர். சிலர் காந்தியின் சிலை மீது காலிஸ்தான் இயக்கத்தின் கொடியை போர்த்தி அவமரியாதை செய்தனர். காலிஸ்தானின் மஞ்சள் கொடியை காந்தி சிலையின் மீது போர்த்திய ஆர்ப்பட்டக்காரர்கள் சிலையில் பதாகைகளையும் ஒட்டியிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களின் இந்த செயல் விஷமத்தனமானது என இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

Tags : United States ,Gandhi , Khalistan flag, Gandhi statue, disrespect, condemnation, USA
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்