×

மேற்கூறைகள் இடிந்து விழுவதால் வீடுகளை காலி செய்யும் அரசு அலுவலக ஊழியர்கள்

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்து அலுவலர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. சிவகங்கை கடந்த 1985ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், கல்வி, மின்வாரியம், வனம், கருவூலம், தொழில் மையம், வேளாண் மையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.

கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு 30ஆண்டுகள் ஆகிவிட்டதால் கடுமையான சேதமடைந்த நிலையில் இருந்து வருகின்றன. கல்வித்துறை, கருவூலம், கலெக்டர் அலுவலகத்தின் வெளிப்புற பகுதி, வனத்துறை அலுவலகங்களில் வெளிப்புற சிலாப்புகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வருகின்றன. இதுபோல் ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் கட்டிடத்தின் மேற்கூரைகள் சிதைந்து விழுவது, சிலாப்புகள் உடைந்து விழுவது என்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.

அலுவலகங்களில் உள்ள தரைத்தளங்களும் சேதமடைந்து பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இந்த அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகள், கழிப்பறை கதவுகள் அனைத்தும் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளன. வாகன நிறுத்துமிடங்கள் பல இடங்களில் முழுமையாக சேதமடைந்துள்ளன. அலுவலகங்களில் உடைந்து விழும் சிலாப்புகள், மேற்கூறை உடைந்து விழுந்த பகுதியை மட்டும் அவ்வப்போது சீரமைத்து பெயிண்டிங் செய்து விடுகின்றனர். அரசு குடியிருப்புகள் ஏ, பி, சி, டி, இ என ஐந்து பிளாக்குகளாக உள்ளன. இ பிளாக்கில் உள்ள வீடுகள் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் இந்த குடியிருப்பில் இருந்த பெரும்பாலோனோர் காலி செய்து விட்டனர். சி, ஏ பிளாக்கிலும் கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலர் வீடுகளை காலி செய்து விட்டனர். சிலர் மட்டும் வசித்து வருகின்றனர்.

அலுவலர் ஒருவர் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டாமல் தொடர்ந்து டச்அப் வேலைகள் மட்டுமே செய்து தொடர்ந்து பராமரிப்பு பணி என பில் எடுத்து வருகின்றனர். இதனால் பயனில்லை. சிலாப்புகள், மேற்கூறைகள் இடிந்து விழுவதால் உயிர்சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை மதித்து இது குறித்து மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Government office workers ,homes , Home, Government Office Employees
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை