×

அதிகளவு ஏற்றுமதிக்கு வாய்ப்பிருந்தும் அரசு பாராமுகம்: கண்ணீர் வடிக்க வைக்கும் கண்வலி கிழங்கு விவசாயம்

பழநி: வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பிருந்தும் அரசின் பாராமுகத்தால் உரிய விலை கிடைக்காமல் கண்வலி கிழங்கு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். தமிழகத்தின் மாநில மலர் என்ற பெருமைக்குரியது செங்காந்தள். இந்த மலரில் உருவாகும் கண்வலி கிழங்கு மருத்துவ குணம் நிறைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி அருகே பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், கரடிக்கூட்டம், தேவத்தூர், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, பொருளூர், குப்பாயிவலசு, வாகரை, தொப்பம்பட்டி பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிடும் முக்கிய வேளாண் பயிராக கண்வலி கிழங்கு எனும் செங்காந்தள் உள்ளது.

அழியும் பட்டியலில்...
விவசாயிகள் கண்வலி கிழங்கு செடி என்று அழைத்தாலும் செங்காந்தள் செடி, கார்த்திகை செடி என்றும் அழைக்கப்படுகிறது. நெருப்பு போன்று சிவப்பு நிறத்தில் இதழ்கள் கொண்டு கண்ணைக் கவரும் செங்காந்தள் மலர்கள் இச்செடியில் பூக்கின்றன.

இதயம் காக்கும்...
கண்வலி செடியில் காய்க்கும் விதையிலும், கிழங்கிலும் புற்றுநோய் பரவாமல் தடுக்கக்கூடிய கால்சிசின், குளோரியோசின் மருத்துவ பொருட்கள் அதிகளவில் உள்ளன. கண்வலி விதையின் நச்சுத்தன்மையை நீக்கி மருந்தாக்கி புற்றுநோய் பரவாதிருக்க மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இருதயம், தண்டுவடம் தொடர்பான நோய்க்கான மருந்துகளிலும் இது இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் இதற்கான பயன்பாடு அதிகம்.

ஆந்திராவில் இருந்து...
ஆந்திர மாநிலத்தில் இருந்து கிலோ ரூ.600 வரை விலை கொடுத்து வாங்கி வரும் கண்வலி கிழங்கை 6 மாதம் கீற்று கொட்டகையில் வைத்து பராமரிக்கும் விவசாயிகள், கிழங்குகள் முளைப்புத்தன்மையை அடைந்தவுடன் ஆவணி மாதத்தில் தங்கள் நிலத்தில் பதிக்கத் துவங்குகின்றனர்.

முன்னதாக நிலத்தை உழுது கிழங்குகள் வளர தேவையான உரங்களை இட்டு, கண்வலி செடி படரும் வகையில் கம்பி மற்றும் சிறு குச்சிகளை பயன்படுத்தி பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒரு ஏக்கரில் கண்வலி பயிரிட சுமார் 600 கிலோ கிழங்கு தேவைப்படுகிறது. சுமார் ரூ.4 லட்சம் வரை செலவாகும். நெல், கரும்பு போன்ற பயிர்கள் மழையை நம்பி மட்டுமே பயிரிடப்படும் நிலையில் கண்வலி செடி அதிகம் மழை பெய்தால் சேதமாகும். அதிகம் வெயில் அடித்தாலும் கருகி விடும். சொட்டு நீர் பாசனம் அமைத்து குறைந்த அளவு நீர் பாய்ச்சினா லே போதும். கண்வலி கிழங்கு நிலத்தில் நட்டதில் இருந்து 5 மாதத்தில் பூ பூத்து காய்க்க துவங்க விடும்.

இங்கிருந்து இத்தாலிக்கு...
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பகுதிக்கே வந்து விதையின் தரத்திற்கேற்ப, விலை கொடுத்து விதைகளை வாங்கிச் செல்கின்றனர். கண்வலி விவசாயத்தை பணப்பயிராக இப்பகுதி விவசாயிகள் பார்க்கின்றனர்.

கிலோ ரூ.1,600 வரை விலை போன இக்கிழங்கு, இப்போது குறைவாகவே பெறப்படுகிறது. கண்வலி கிழங்குஉற்பத்தியில் 90 சதவீத அளவில் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதிகள் முக்கிய பங்களிக்கின்றன. இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கும் கண்வலி விதைகள் ஏற்றுமதியாகின்றன. சமீப காலமாக இதன் விலை நிர்ணய உரிமை உள்ளூர் இடைத்தரகர்களிடம் சென்றதால், இடைத்தரகர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே கண்வலியை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காத நிலை இருக்கிறது. அதிகளவு ஏற்றுமதிக்கு வாய்ப்பிருந்தும் குறைந்தளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு மாற்றுப்பயிராக, நல்ல லாபம் தரக்கூடிய கண்வலி கிழங்கு பயிரிட விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government , Agriculture
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...