×

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது: நிரம்பி வழிந்த பெரிய ஏரிக்கரை உடைந்தது

வேலூர்: குடியாத்தத்தில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரிக்கரை நேற்றிரவு உடைந்து தண்ணீர் வெளியேறியதால் நகர மக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் உடைப்பு ஏற்படாமல் தடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கன மழையால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி உபரி நீர் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த ஏரி 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 6ம் தேதி பெரிய ஏரி முழுவதும் நிரம்பியது. தொடர்ந்து கோடி சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நெல்லூர்பேட்டை ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வழியும் இடத்தின் வெளிப்புறத்தில் கரை நேற்றிரவு 7 மணியளவில் திடீரென உடைந்தது. அந்த வழியாக தண்ணீர் வெளியேறியது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதும் குடியாத்தம் நகர மக்களிடையே பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. உடனே உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று கூட்டம் கூட்டமாக பார்வையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம், டிஆர்ஓ பார்த்திபன், சப்-கலெக்டர் ஷேக் மன்சூர் மற்றும் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இரவு 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி ஏரி கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரை, தடுத்து நிறுத்தி கவுண்டன்யா மகாநதி ஆற்றங்கரைக்கு திருப்பி விட்டனர். இதனால் குடியாத்தம் பெரிய ஏரிக்கு வரும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.

பின்னர், நெல்லூர்பேட்டை ஏரி கோடி வடியும் சுவர் மீது குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தண்ணீர் கசியாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், ‘பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். ஏரி உடைப்பு சரி செய்வதற்கான  பணிகள் துவங்கி உள்ளது’ என்றார். அப்போது தாசில்தார் வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, குடியாத்தம் பொறுப்பு டிஎஸ்பி சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த ஏரி கரை உடைந்து வெள்ளம் வெளியேறியிருந்தால் நெல்லூர் பேட்டை, புத்தர் நகர், சாமந்திபுரம் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். மேலும் குடியாத்தம் நகருக்குள்ளும் வெள்ளம் வந்து பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். சரியான நேரத்தில் உடைப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் மணல் மூட்டைகள் அடுக்கி தடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் குடியாத்தம் டவுன் போலீசார் தொடந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Gudiyatham ,area ,lake , Vellore
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...