மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மாநில அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை!: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு பதில்..!!

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய அரசிடம், மாநில அரசு வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1266 கோடியில் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான நிதியை ஜப்பானிய பன்னாட்டு முகமை ஜிக்கா நிறுவனம் என்ற அமைப்பு மூலம் கடன் பெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. 2022ம் ஆண்டு செப்டம்பரில் இந்த பணி நிறைவடையும் என்று ஏற்கனவே உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதனிடையே ஜிக்கா அமைப்பிடம் இருந்து இதுவரை நிதி கிடைக்கப்பெறவில்லை. தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் குறித்து, சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜிக்கா நிறுவனங்களுக்கிடையே கடன் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன் விபரம் தெரிவிக்கப்படும். ஜிக்கா நிறுவனத்திடம் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கும். இன்றைய நிலவரப்படி, எய்ம்ஸ்க்கான நிலத்தை, மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ.யின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜா கூறுகையில், முதலில் டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, தெரிவித்த மத்திய அரசு இம்முறை அது பற்றி எந்த உத்தரவாதமும் தரவில்லை. இதனால் எப்போது கடன் கிடைக்கும்? எப்போது கட்டுமான பணி துவங்கும் என்பது தெரியவில்லை. மத்திய - மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் என்பது காலதாமதாக சென்றுகொண்டிருக்கின்ற சூழலில் மத்திய அரசிடம், மாநில அரசு நிலம் ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. மதுரை நகர் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கே எய்ம்ஸ்? என்கின்ற போஸ்டர் முழுமையாக ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: