×

பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் : அவசர சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கத்திற்கான அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் குற்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், பாலியல் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் வழி வகை செய்யும் அவசர சட்டத்தை பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார். ரசாயனம் மூலம் அதிதீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரின் ஆண்மையை நீக்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. அதே போன்று அவசர சட்டத்தின் படி, பாலியல் குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் 4 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் வேண்டும். 120 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி ந்த அவசர சட்டத்தை சட்டமாக மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : sex offenders ,Pakistan ,Chancellor , Pakistan, sex, criminals, masculinity, expulsion
× RELATED பின்தங்கிய முஸ்லிம் பெண்களின்...