×

எய்ம்ஸ் செவிலியர் 2வது நாளாக போராட்டம்

* வேலைநிறுத்தத்தை கைவிட நிர்வாகம் அறிவுறுத்தல்
* ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்தவும் முடிவு

புதுடெல்லி: டெல்லி-எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர் நடவடிக்கையாக எய்ம்ஸ் நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் நண்பகல் முதல், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஆறாவது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின்படி ஆரம்ப ஊதியத்தை நிர்ணயிப்பதில் உள்ள ஒழுங்கின்மையை சரிசெய்தல், நர்சிங் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் பாலின அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழித்தல் மற்றும் ஒப்பந்த நியமனங்கள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து முன்கூட்டியே செவிலியர் சங்கம் சார்பில் எய்ம்ஸ் நிர்வாகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றிற்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனால், செவிலியர்கள் தங்களது வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவமனையில் நர்சிங் செயல்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கு உத்தரவிட்டது. மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின்படி, நடத்தை விதிமுறைகளை பின்பற்றாமல், எந்தவொரு பணியாளரும் எந்த காரணத்திற்காகவும் பணியை நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. இதனை மீறினால்  பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, எய்ம்ஸ் இயக்குநர் குலேரியா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.அந்த வீடியோவில் பேசிய குலேரியா,கொரோனா தொற்றுநோய்களின் போது வேலைநிறுத்தம் பொருத்தமற்றது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியதோடு, செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.எனினும், இதனை ஏற்க மறுத்த செவிலியர் சங்கம் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால், செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது செவிலியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தை தொடர ஐகோர்ட் தடை
செவிலியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. செவிலியர் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக எய்ம்ஸ் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து போராட்டத்தை தடை செய்ய கேட்டுக்கொண்டது. தற்போதைய கோவிட் சூழலை கருத்தில் கொண்டு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியது. மேலும், செவிலியர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் உறுதியளித்தது. இதனையேற்றுக்கொண்ட நீதிபதி நவீன் சாவ்லா, இநத தடை உத்தரவை பிறப்பித்ததோடு, செவிலியர் சங்கத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 2021க்கு ஒத்தி வைத்தார்.

Tags : Ames Nurse Struggle for 2nd day
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்