×

ஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருப்பதால் வரும் ஜனவரி முதல் ஜூலை வரை கல்வியாண்டை நிர்ணயம் செய்வதுடன் வரும் கோடைகால விடுமுறையை தவிர்க்க மாநில கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் திறக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களுடன் அரசு தரப்பில் நடத்திய ஆலோசனையில் பெரும்பான்மையான பெற்றோர்கள் முழுமையாக கொரோனா முடிவுக்கு வந்தபின் தான் திறக்க வேண்டும் என்று உறுதியாக வெளிப்படுத்தினர்.

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையான தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடைக்காமல் வஞ்சித்து வருகிறார்கள். தனிடையில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட கோவிட்-19 வழி காட்டுதலில் 9, 10ம் வகுப்புகள் மற்றும் முதல். இரண்டாமாண்டு முதல்நிலை கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று அதிகமிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டின் 6 மாதங்கள் முடிந்துள்ளதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில் கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளிகள் மற்றும் முதல் மற்றும் இரண்டாண்டு முதல்நிலை கல்லூரிகள் திறக்கும் யோசனையை முதல்வர் எடியூரப்பாவிடம் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநில கல்வி இயக்குனரக ஆணையர் அன்புகுமார், மாநில கல்வி அமைச்சக முதன்மை செயலாளர் உமாசங்கர் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு என்னென்ன வழிகாட்டுதல் முறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிய
வருகிறது.

நடப்பு கல்வியாண்டின் முதல் 6 மாதங்கள் முடிந்துள்ளதால், வரும் ஜனவரி தொடங்கி ஜூலை இறுதி வரை 2020-21ம் கல்வியாண்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு தேர்வுகளை இந்த கால கட்டத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வகுப்பு பாதிக்காமல் தவிர்க்க வரும் கோடை காலத்தில் வழக்கமாக விடப்படும் விடுமுறை ரத்து செய்யும் யோசனையில் கல்வி இயக்குனரகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரபூர்வ முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்
நடப்பு கல்வியாண்டை வரும் 2021 ஜூலை வரை நீடிப்பது நல்ல முடிவு என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் கோடை விடுமுறையை முழுமையாக தவிர்க்ககூடாது. குறைந்தது 15 முதல் 20 நாட்கள் கோடை விடுமுறை விட வேண்டும். வெயில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சரியாக இருக்காது. விடுமுறை ரத்து செய்யும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் வி.எம்.நாராயணசாமி தெரிவித்தார்.

Tags : Directorate of Education , The Directorate of Education has decided to skip the summer holidays from January to July academic year
× RELATED வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் திடீர்...