கர்நாடகாவில் மானியம் பெறாத பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜோதி சஞ்ஜீவினி திட்டம்: கல்வியமைச்சர் சுரேஷ்குமார் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மானியம் பெறாத பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஜோதி சஞ்ஜீவினி திட்டம், வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, மாநிலத்தில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த 2015ம் ஆண்டு கல்வி திட்டத்தின் படி ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான விகிதம் 1:70 (70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்) என்ற வகையில் உள்ளது. இதை 1:50 என்ற விகிதாச்சார அடிப்படையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பல அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் உடல்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகவுள்ளது. அதை நிரப்புவது தொடர்பாக டாக்டர் வைத்தியநாதன் தலைமையிலான குழு கொடுத்த ஆய்வு அறிக்கைப்படி உடல் கல்வி ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின், உடல் கல்வி ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும். மேலும் தற்போது அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜோதி சஞ்ஜீவினி திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

ஆசிரியரின் சிகிச்சைக்கு உதவிகள்

மைசூரு  மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹண்டுவினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்  மகாதேவசுவாமி (52).  அரசு மானியம் பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி  வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும்போது  விபத்தில் சிக்கிய மகாதேவசாமி பலத்த காயமடைந்தார். கடந்த ஓராண்டாக கோமா  நிலையிலேயே உள்ளார்.

இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்  குமார் ஹண்டுவினஹள்ளி கிராமத்தில் உள்ள மகாதேவசுவாமியின் வீட்டிற்கு சென்று  மகாதேவசுவாமியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.  அப்போது,  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், `` மகாதேவசுவாமியின் மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும்  அரசு செய்யும். அத்துடன்  கருணை அடிப்படையில் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

Related Stories:

>