×

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மனைவி காலமானார்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை:  முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மனைவி நேற்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி எம்பியுமாக இருப்பவர் ஜெகத்ரட்சகன். இவரது மனைவி அனுசுயா(68). இவர்களுக்கு  சந்தீப் ஆனந்தராஜ் என்ற மகனும், நிஷா என்ற மகளும் உள்ளனர். ெஜகத்ரட்சகன் குடும்பத்துடன்  சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி அனுசுயாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அடையாறு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர்   மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஜெகத்ரட்சகன் மனைவி  அனுசுயாவின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு,  அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது திமுக பொது செயலாளர்  துரைமுருகன், துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்பி, செய்தி தொடர்பு செயலாளர்  டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி,  எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், க.சுந்தர்,   எஸ்.ஆர்.ராஜா, வி.ஜி.ராஜேந்திரன், கவிஞர் காசி முத்து மாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் ஜெகத்ரட்சகனின் மனைவி உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஜெகத்ரட்சகனுக்கும் அவரது மனைவிக்கும் அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பேரும் மீண்டு வந்தனர்.  இந்த நிலையில் அவரது மனைவி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியியில், “முன்னாள் மத்திய அமைச்சரும்-அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் வாழ்வின்  அச்சாணியாகவும்- அரசியல் பயணத்திலும் மக்கள் சேவையிலும்  உற்சாகமளிக்கும் மிகப்பெரும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர். ஜெகத்ரட்சகனுக்கு, அசைக்க முடியாத மலை போல் ஆதரவாக நின்று பொதுவாழ்விலும், திமுகவிலும் மகத்தான பணியாற்றத் துணை நின்றவர். அவரை இழந்திருப்பது  ஜெகத்ரட்சகனால் தாங்கிக் கொள்ள முடியாத துயரம். எவ்வழியிலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஆறுதல் சொல்லவே என்னிடம் வார்த்தைகள் வர மறுக்கின்றன. அந்த அளவிற்கு அவரது மறைவில் நானும் சோகத்தில் மூழ்கியிருக்கிறேன்.  அனுசுயாவை இழந்து வாடும் ஜெகத்ரட்சகனுக்கும், குடும்பத்தினர் மற்றும் சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்-ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jagathratsakan ,MK Stalin , Former Union Minister Jagathratsakan's wife passes away: Tribute to MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...