இனிமேல் சட்ட தடைகள் எதுவும் இல்லை பிடென் வெற்றி உறுதியானது: வாக்காளர் குழுவின் 270 ஓட்டுகளை பெற்றார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடென் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இங்கு மக்களால் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க முடியாது. ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் ‘எலெக்டோரல் காலேஜ்’ எனப்படும், ‘வாக்காளர் குழு’ அமைக்கப்படும். தேர்தலுக்குப்பிறகு இவர்கள் ஒன்று கூடி வாக்களித்து, அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வார்கள். அதன்படி, இந்த வாக்காளர் குழுவின் வாக்களிப்பு நடைமுறை நேற்று முன்தினம் நடந்தது. இதில், 50 மாகாணங்களில் இருந்தும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 வாக்காளர் குழு பிரதிநிதிகளும் வாக்களித்தனர்.

ஹவாய் தவிர மற்ற மாகாணங்களில் இந்த வாக்களிப்பு முடிந்துள்ளது. இதில், பிடென் பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்காளர் குழு வாக்குகளை பெற்று, அதிபர் பதவியை கைப்பற்றுவதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார். பெரும்பாலான வாக்காளர் குழு பிரதிநிதிகள், பிடெனுக்கே வாக்களித்து இருப்பதால், அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்த வாக்கு முடிவு அறிவிக்கப்படும். பின்னர், ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராக பிடென் பதவியேற்பார்.

* புடின் வாழ்த்து

கடந்த மாதம் 3ம் தேதி தேர்தலில் பிடென் வெற்றி பெற்றதுமே பிரதமர் மோடி உட்பட பல உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புடினும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்ததுமே ஜின்பிங் வாழ்த்தினார். இந்நிலையில், வாக்காளர் குழு தேர்தலில் பிடென் பெரும்பான்மை பெற்றதாக நேற்று தகவல்கள் வெளியானதும் புடினும் வாழ்த்து தெரிவித்தார். ‘உலகளாவிய பாதுகாப்பு, நிலைத்தன்மையை காப்பதிலும், உலகம் சந்திக்கும் சவால்களையும் தீர்ப்பதிலும், வேற்றுமைகளை களைந்து இருதரப்பும் இணைந்து பணியாற்ற வேண்டும்,’ என அவர் கூறியுள்ளார்.

* ‘ஜனநாயகம் வலிமையானது’

வாக்காளர் குழு வாக்களிப்புக்குப் பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிடென், ‘‘அமெரிக்க ஜனநாயகம் பரிசோதிக்கப்பட்டது, அச்சுறுத்தப்பட்டது. ஆனால், அது மீண்டு வரக்கூடியது, உண்மையானது, வலிமையானது என்பதை நிரூபித்துள்ளது,’’ என்றார்.

Related Stories:

>