×

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சரணாலயமாய் விளங்கும் வனிதா!

கோவை, கிணத்துக்கடவு பகுதியில் ‘சரணாலயம்’ என்று பேர் சொன்னாலே, அது பற்றி தெரியாதவர்கள் கிடையாது. காரணம், ‘சரணாலயம்’ பலரின் இல்லமாக இன்று சரணாலயமாக மாறி இருக்கிறது. இதனை நிர்வகித்து வரும் வனிதா ரெங்கராஜ் 18 வருடம் முன்பு துவங்கினார். ஏழு குழந்தைகள் கொண்டு துவங்கப்பட்ட இந்த இல்லம் இப்போது 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்விடமாக வளர்ந்துள்ளது. ‘‘சொந்த ஊர் மதுரை. அப்பா தொழிலதிபர். என் கூட பிறந்தவங்க ஏழு பேர். மதுரையில் தான் படிச்சேன்.

அதன் பிறகு பொள்ளாச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாறு துறையின் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். எல்லா பெண்களையும் போல நானும் குடும்பம் என்ற பந்தத்திற்குள் இணைந்தேன். அவர் பொறியியல் துறையில் இருந்தார். எனக்கு மூன்று மகள்கள். பெரிய பொண்ணு நான் தத்து எடுத்து வளர்த்தவள். அவளும் என்னுடைய கடைசி பொண்ணும் தான் சரணாலயத்தை  பார்த்துக்கிறாங்க’’ என்றவர் சரணாலயம் ஆரம்பிக்கும் காரணத்தை விவரித்தார்.

‘‘எனக்கு அடிப்படையில் சேவை மனப்பான்மை குணம் அதிகம். யாராவது பசின்னு வந்த கேட்டா உடனேஅவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பேன். நான் தனியாக இதை செய்வதற்கு ஒரு அமைப்பு மூலம் செய்ய நினைச்சேன். அதனால் ரோட்டரி கிளப்பில் இணைந்தேன். அதன் மூலம் நிறைய பேருக்கு உதவ நினைச்சேன். முதலில் எங்க ஏரியாவில் உள்ள சேரி பசங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நினைச்சேன். அங்கு போன போது தான் தெரிந்தது பல குழந்தைகள் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர்.

உண்ண உணவு, உடுத்த உடை கூட அவர்களிடம் இல்லை. இது எல்லாவற்றையும் விட பல மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவர்களை பராமரிக்கவும் யாரும் இல்லை. இந்த காட்சியை பார்த்த போது, எனக்குள் ஒரு நிமிடம் சப்த நாடியும் அடங்கி போனது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என் மனதில் மணி அடித்துக் கொண்டே இருந்தது. இவர்களுக்கு தேவை அன்பு, பாசம் மற்றும் அரவணைப்பு. அதை கொடுக்க முடிவு செய்தேன். அது தான் 2001ம் ஆண்டு சரணாலயம் உருவாகக் காரணம்.

முதலில் ஒரு சின்ன வாடகை வீட்டில் தான் சரணாலயத்தை ஏழு குழந்தைகளுடன் ஆரம்பிச்சேன். சாலையில், ரயில் நிலையத்தில், பேருந்து நிலையம் மற்றும் சேரியில் அனாதையாக திரிந்த இந்து குழந்தைகளை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். முதலில் ஏழு பேர் தான் இருந்தாங்க. அந்த காலக்கட்டத்தில் இது போன்ற குழந்தைகளுக்கான பராமரிப்பு அதிகமாக இருந்தது. ஒரு வருடத்தில் சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்தார்கள். அப்போதும் நான் கல்லூரியில் வேலைப்பார்த்து வந்தேன்.

ஒரு கட்டத்தில் இவர்களுக்கு என்னுடைய தேவை அதிகமானதால், எட்டு வருஷம் சர்வீஸ் இருந்தும், வாலன்டரி ஓய்வு பெற்று வேலையை ராஜினாமா செய்தேன். அன்று முதல் இன்று வரை இவர்கள் தான் என் குடும்பம். இவங்களின் அம்மா, அப்பா எல்லாம் நானாக மாறினேன்’’ என்றவர் இந்த இல்லத்தை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தினார். ‘குழந்தைகள் இங்கு சேர சேர, சரணாயலத்தை பற்றி மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தது. லயன்ஸ் கிளப் இவர்களுக்கு 3000 சதுர அடியில் ஒரு கட்டிடத்தை கட்டி இந்த குழந்தைகளுக்காக கொடுத்தனர்.

அதன் பிறகு நாங்களும் இந்த குழந்தைகளுக்காக எங்களின் இல்லத்தை இங்கு மாற்றி அமைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஆறு வருடம் என் இல்லத்தில் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் இல்லாமல் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளும் தஞ்சம் அடைந்தார்கள். அப்பத்தான் யோசித்தேன். எவ்வளவு குழந்தைகளுக்கு என்னால் அடைக்களம் கொடுக்க முடியும். இங்கு இவர்கள் ஒரு இல்லத்தில் வாழ்வதைவிட அவர்களுக்கு என குடும்பம் அமைத்து தர திட்டமிட்டேன். அதனால் முறையாக குழந்தைகளை தத்து எடுக்கும் இல்லமாக அங்கீகாரம் பெற்றேன்.

அதற்காக நான் போராடியது கொஞ்சம் நஞ்சமில்லை. காரணம் தத்து கொடுக்கும் இல்லமாக ஒரு அமைப்பை மாற்றி அமைக்க பல விதிமுறைகள் உள்ளது. அதை எல்லாம் படிப்படியாக தான் கடந்து வந்தேன். அந்த கடின உழைப்பு தான் இப்போது என் இல்லத்தில் தஞ்சமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அம்மா அப்பா சொந்தம்ன்னு ஒரு குடும்பம் அமைந்துள்ளது’’ என்றவர் கடந்த பத்தாண்டுகளாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.

‘‘பத்து வருடத்திற்கு மேலாக நான் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் மற்றும் அவர்களின் சிகிச்சைக்காக உதவி செய்து வருகிறேன். எங்க இல்லத்தில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளனர். எங்க இல்லம் நோயாளிகளுக்கும் மருத்துவமனைக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மிகவும் உதவியாக உள்ளது. எங்களின் முக்கிய நோக்கம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இவர்களுக்கும் ஒரு  வாழ்க்கையை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தான்.

மேலும் இவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் எங்களுக்கு அளித்து உதவி வருகிறது’’ என்றவர் அடுத்து கையில் எடுத்தது மனநல காப்பகம்.‘‘அதற்கு பூச்சி என்ற 10 வயது சிறுவன் தான் காரணம். செரிபிரல் பால்சி என்ற நோயின் பாதிப்பு இருந்தது. சேரியில் பசியில் உடல் அசதியில் படுத்து இருந்த பூச்சி நான் அங்கு சென்ற போது என் கண்ணில் பட்டான். அவனுடைய உடலில் நாய் மற்றும் பூனை கடித்த தழும்புகள் இருந்தன.

அது பற்றிக்கூட சொல்ல முடியாத நிலையில் இருந்தான். அங்கு சென்று வந்த பிறகு அந்த காட்சி என் கண் முன்னே தோன்றிக் கொண்டே இருந்தது. அவனுக்கு சக்தின்னு பெயர் சூட்டினேன். சரணாலயம் ஆரம்பித்த போது வந்த எழு குழந்தைகளில் அவனும் ஒருவன். என்னிடம் பத்து மாதம் இருந்தான். டாக்டரின் சிகிச்சை அளித்தும் என்னால் அவனை காப்பாற்ற முடியவில்லை. அவனுடைய இழப்பு என்னை பெரிய அளவில் பாதித்தது. ரொம்ப நாள் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை.

அவன் மட்டும் இல்லை எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இறக்கும் போது, நான் ரொம்பவே மனதளவில் பாதிப்படைவேன். ஆனால் எதுவும் என் கையில் இல்லை. ஆண்டவன் செயல்ன்னு மனசை தேற்றிக் கொள்வேன். இவர்கள் எல்லாரும் என் மற்ற குழந்தைகளுடன் இணைந்து தான் வளர்கிறார்கள். சரணாலயம் எல்லாருக்குமான குடை. அதை என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது.
இங்கு குழந்தை காப்பகம், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் இல்லை பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள்,

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆடிசம் குழந்தைகளுக்கான பயிற்சி மையங்கள் எல்லாம் உள்ளன. அது மட்டும் இல்லை, சரணாலயத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதில் நான் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருக்கேன். அதனால் இங்குள்ள அரசு பள்ளியில் என் குழந்தைகள் எல்லாரும் படிக்கிறாங்க. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியிலோ அல்லது பாலிடெக்னிக்லோ அவர்கள் விரும்பும் படிப்பை படிக்கவும் வைக்கிறேன்’’ என்றவர் தன் குடும்பத்தின் உதவி இல்லாமல் சரணாலயம் விரிவடைந்திருக்காது என்றார்.

‘‘ஏழு பேர் கொண்டு ஒரு வாடகை வீட்டில் தான் சரணாலயம் ஆரம்பிச்சேன். இப்போது அது ஜந்து பிரிவுகளாக வளர்ந்துள்ளது. நான் தனியாக துவங்கினேன் என்றாலும். என்னுடைய சேவை வளர பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடிந்து இருக்குமான்னு தெரியல, முக்கியமா என் குடும்பம். என் கணவர், குழந்தைகள் என்னை புரிந்துக் கொண்டுள்ளனர். அந்த புரிதல் இல்லைன்னா இப்ப இந்த குழந்தைகள் இல்லை’’ என்ற வனிதாவிற்கு சிறப்பு குழந்தைகள் மேல் தனி பிரியமாம்.

‘‘எல்லாருமே என் குழந்தைகள் தான். அவர்கள் தான் எனக்கு எல்லாமே. ஆனால் சிறப்பு குழந்தைகளுக்கு தனி கவனம் தேவை. அவர்களுக்கு என்ன வேணும்ன்னு கூட சொல்ல தெரியாது. பசிக்குதுன்னு சொல்ல தெரியாது. தூங்க மாட்டாங்க. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யணும். இப்படியும் குழந்தைகள் இருக்காங்க. மறுபக்கம் கொஞ்சம் அராஜகம் செய்யும் குழந்கைளும் இருக்காங்க. ஒரு பையன் கொஞ்சம் முரட்டுத்தனமாக தான் இருப்பான். பள்ளி ஆசிரியர்களால் அவனை கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

அவனை நான் திட்டவில்லை. காரில் அழைத்துக் கொண்டு சென்றேன். சாலையில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தவிப்பவர்களை காண்பித்தேன். இவனுக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கை இருப்பதை புரிய வைத்தேன். இப்ப அவன் பிளம்பிங் வேலைப் பார்த்து வருகிறான். எனக்கும் வயசாகி வருகிறது. என்னால் முன்பு போல் ஓட முடியவில்லை. என் மகள்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்கிறார்கள்.

என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை என் குழந்தைகளுக்காக நான் இருப்பேன். அதற்கு பிறகு என் மகள்கள் பார்த்துக் கொள்வதாக வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு இப்போது பயிற்சி அளித்து வருகிறேன். நான் தத்தெடுத்த மகள் மகேஸ்வரி தான் இப்போது முழுமையாக சரணாயலத்தை பார்த்துக் கொள்கிறாள். இளையவள் படிப்புக்கு பிறகு அக்காவுக்கு துணையாக இருப்பாள். எனக்கு பிறகு என் குழந்தைகளுக்கு அதே அன்பு இவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு’’ என்றார் வனிதா ரெங்கராஜ்.

- ப்ரியா

Tags : Vanita ,sanctuary ,children ,
× RELATED திருவண்ணாமலையில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பெண்கள் கைது