×

கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலக சார் பதிவாளரிடம் ரூ.13.5 லட்சம், 114 சவரன் பறிமுதல்: விடிய விடிய லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

கூடுவாஞ்சேரி: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையோரத்தில், நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதையொட்டி, சார் பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்தபோதிலும் பட்டா, சிட்டா, அடங்கல் உள்பட பல்வேறு ஆவணங்களை பெற, லஞ்சம் வாங்குவதாகவும், இதில் புரோக்கர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று மாலை 5 மணியளவில், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். அங்கு நேற்று காலை வரை விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 950 சிக்கியது.

அதேபோல் சார் பதிவாளர் தாணுமூர்த்தி (52) வசிக்கும் மகேந்திரா சிட்டியிலுள்ள அவரது வீட்டில் நேற்று காலை தொடங்கி மதியம் வரை சோதனை நடத்தினர். அப்போது, ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 400, 114 சவரன் நகை கைப்பற்றப்பட்டன. அவரிடம் இருந்து அலுவலகம் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட மொத்த தொகை ரூ.13 லட்சத்து, 48 ஆயிரத்து 350 ஆகும். தொடர்ந்து, அவரிடமும், அவரது  தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரிக்கின்றனர். கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Guduvancheri Registrar of Deeds: Vidya Vidya Anti-Corruption Department , 13.5 lakh, 114 razors confiscated from registrar of Guduvancheri deeds office: Vidya Vidya Anti-Corruption Department raids
× RELATED கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலக...