×

பஞ்சாப் அரசியலை தீர்மானிக்கும் விவசாயிகள் போராட்டம்: அரசியல் ஆதாயத்துக்காக உங்கள் ஆன்மாவை விற்றுவிட்டீர்!: அமரீந்தர் சிங் - கெஜ்ரிவால் காரசார மோதல்

புதுடெல்லி: பஞ்சாப் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விவசாயிகள் போராட்டம் அமைந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே காரசார கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, பலமான எதிர்கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. மாநில அளவிலான பல பிரச்னைகளில் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும்  மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துவது தொடர்பாக இருகட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் தீவிரமாகி உள்ளன. நேற்று விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் உண்ணாவிரதம் இருந்தார்.  இவர் தனது அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி ஊழியர்களுடன் நேற்று  மாலை 5 மணிக்கு கட்சி அலுவலகத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், ‘மத்திய அரசின் வேளாண் சட்டமானது விவசாயிகளுக்கு எதிராக மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. இது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும்’ என்றார். இதற்கு பதிலடி கொடுத்த பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங், ‘ஒவ்வொரு பஞ்சாபிக்கும் தெரியும், நான் அமலாக்கத்துறைக்கோ, பிற புலனாய்வு அமைப்புகளுக்கோ பயப்படவில்லை என்பது. அரசியல்  ஆதாயங்களுக்காக நீங்கள் (கெஜ்ரிவால்) உங்களது ஆன்மாவை விற்றுவிட்டீர்கள். உங்களது வித்தைகளை விவசாயிகள் நன்கு அறிவார்கள். நீங்கள் வேளாண் மசோதாவுக்கு ஆதரவு அளித்தீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்’ என்று பதிவு  செய்துள்ளார்.

அமரீந்தரின் பதிவுக்கு பின்னர் உடனடியாக கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், ‘இந்த மசோதாக்களை உருவாக்கிய குழுவில் நீங்கள் இடம் பெற்று இருந்தீர்கள். இந்த மசோதா முழு வடிவம் பெற்றதற்கு நீங்களும் ஒரு காரணம். நாட்டு  மக்களுக்கு கொடுத்த பரிசு எதுவென்றால் இந்த வேளாண் சட்டம்தான். பாஜக தலைவர்கள் உங்களிடம் இரட்டை வேடம் போட்டு பேசுகின்றனர். அவர்கள் உங்கள் கட்சியின் மற்ற தலைவர்களை குற்றம்சாட்டி பேசும்போது, உங்களை அவ்வாறு  கூறுவதில்லையே ஏன்?’ என்று பதிவிட்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் டுவிட்டுக்கு பதிலளித்த அமரீந்தர், ‘இந்த விவசாய சட்டங்கள் எந்தவொரு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை,  தொடர்ந்து பொய்களை பேசவேண்டாம். பாஜக என்னிடம் இரட்டை வேடம் போடவில்லை. உங்களைப் போல  அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறாக இருவரும் மாறிமாறி டுவிட்டரில் காரசாரமாக கருத்துகளை வெளியிட்டது தேசிய, மாநில அரசியலில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.



Tags : Punjab ,clash ,gain ,Amarinder Singh - Kejriwal , Farmers' struggle to decide Punjab politics: You have sold your soul for political gain !: Amarinder Singh - Kejriwal clash
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்