டெல்லி: தீபாவளி சமயத்தில் நடைபெற்ற காதி விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தற்சார்பு இந்தியாவுக்கு உள்ளூர் பொருட்களை வாங்குவோம் என பிரதமர் விடுத்த அழைப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் சமூக இணையதள பிரச்சாரம் ஆகியவற்றால் காதியின் உள்ளூர் தயாரிப்புகள் உட்பட இதர கிராம தொழில்துறை தயாரிப்புகள் அமோகமாக விற்பனையாகியுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 தீபாவளி சமயத்தில் உள்ளூர் தயாரிப்புகளின் விற்பனை சாதனை படைத்துள்ளது.
பண்டிகை காலத்துக்கு முன்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை கலைஞர்களின் பொருட்களை வாங்கும்படி சமூக இணையதளங்களில் எம்எஸ்எம்இ அமைச்சகம் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இது பிரபலமடைந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு தீபாவாளி விற்பனையை விட, இந்தாண்டு தீபாவளி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்த்தில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய கடைகளில், இந்த தீபாவளி காலத்தில் மொத்தம் ரூ.21 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் இங்கு ரூ.5 கோடிக்கு மட்டுமே விற்பனையானது.
நாட்டில் கொவிட் தொற்று இருந்தபோதும், காதி, அகர்பத்தி, மெழுகுவர்த்தி, தேன், உலோக பொருட்கள், கண்ணாடி பொருட்கள், வேளாண் மற்றும் உணவு பொருட்கள், பருத்தி மற்றும் பட்டு துணிகள், கம்பளி மற்றும் எம்ராய்டரி தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. புது தில்லியில் உள்ள காதி கடை ஒன்றில், கடந்த அக்டோபர் 2, 24, நவம்பர் 7, 13 ஆகிய நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.