×

பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனை பலாத்காரம்: 6 ஆண்டாக ‘பிளாக்மெயில்’ செய்தது அம்பலம்

முசாபர்நகர்:  உத்தரபிரதேசத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனையை பலாத்காரம் செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 6 ஆண்டாக வீராங்கனையை  ‘பிளாக்மெயில்’ செய்தது அம்பலமாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த தேசிய அளவிலான ‘சாப்ட்பால்’ பெண் வீராங்கனை ஒருவர் கடந்த 6 ஆண்டுக்கு முன் தனது பிறப்புச் சான்றிதழை விண்ணப்பித்து பெறுவதற்காக உறவுக்காரரான புஃபா என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அவர், தான் பிறப்புச் சான்றிதழை அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த வீராங்கனை, ஒரு நாள் தனது உறவுக்காரரை சந்திக்க சென்றார். அப்போது, ​அந்த நபர் தனது  சகாக்களுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, பாதிக்கப்பட்ட வீராங்கனையின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.‘இந்த விஷயம் வெளியே தெரிந்தால் கொன்றுவிடுவோம். ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம்’ என்று, புஃபா மற்றும் அவரது சகாக்கள் வீராங்கனையை மிரட்டி உள்ளனர்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட அவர் போலீசில் புகார் அளிக்க முயலும் போதெல்லாம், அவரை புஃபா மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டி வந்தனர். கடந்த 6 ​​ஆண்டுகளாக அவ்வப்போது மிரட்டி ‘பிளாக்மெயில்’ செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீராங்கனை முசாபர்நகர் போலீசில் தற்போது புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் புஃபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு (நகரம்) ராஜேஷ் திவேதி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட வீராங்கனை கொடுத்த புகாரின்படி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது  செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். புஃபா உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : player , National 'Softball' player raped for allegedly buying birth certificate: 'Blackmail' exposed for 6 years
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...