மெரினா கடற்கரைக்கு தந்தையுடன் வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் போலீசுக்கு சரமாரி அடிஉதை

சென்னை: தந்தையுடன் மெரினா கடற்கரைக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். சென்னை மெரினா கடற்கரை கொரோனாவுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது. இதனால் நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் தங்களது  குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக வந்து மகிழ்ச்சியாக கடற்கரையை சுற்றிப் பார்த்தனர்.

இந்நிலையில், இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் நேற்று இரவு மெரினா கடற்ரைக்கு வந்துள்ளார்.

விவேகானந்தர் இல்லம் அருகே காமராஜர் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தபோது மகள் பாப்கார்ன் கேட்டதால்,  அதை வாங்க  இளம் பெண்ணின் தந்தை கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இளம் பெண் மட்டும் தனியாக சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாலிபர் ஒருவர் இளம் பெண்ணிடம் ‘ஐஸ்கிரீம் வாங்கி தரேன் என்னுடன் வருகிறாயா’ என்று  கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அச்சத்தில் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு மெரினா கடற்கரைக்குள் சென்றுவிட்டார்.

பாப்கார்ன் வாங்கி வந்த தந்தையிடம் நடந்த சம்பவம் குறித்து இளம் பெண் கூறி கதறி அழுதுள்ளார். அந்த நேரத்தில் அந்த வாலிபர் கடற்கரையில் இருந்து மீண்டும் சாலை நோக்கி வந்துள்ளார். இதை பார்த்த இளம் பெண் இவன்தான்  என்னிடம் தவறாக நடக்க முயன்றான் என அப்பாவிடம் கூறினார்.உடனே இளம் பெண்ணின் தந்தை சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை சம்பவம் குறித்து தட்டி கேட்டார். போதையில் இருந்த வாலிபர் இளம் பெண்ணின் தந்தையை அடித்து உதைத்தார். இதைப் பார்த்த மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்  போதை வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், அந்த வாலிபரை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அவர் மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் பாபு (32) என்பதும், மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது. இளம் பெண் அளித்த புகாரின்பேரில்,  ஆயுதப்படை காவலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி வடபழனியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் போதையில் இருந்த எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய தலைமை காவலர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமாக மெரினா  கடற்கரைக்கு வந்த இளம் பெண்ணிடம் ஆயுதப்படை காவலர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>