×

கொடநாடு வழக்கு விசாரணை தீவிரம்: சட்டமன்ற தேர்தலுக்கு முன் தீர்ப்பு?

ஊட்டி: கொடநாடு காவலாளி கொலை வழக்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழக்கில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. அப்போது கிருஷ்ணதாபா என்ற மற்றொரு காவலாளி தடுக்க முயன்றதால் அவரை தாக்கிய கும்பல், பங்களாவிற்குள் சென்று விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் கோப்புக்களை கொள்ளை அடித்து சென்றது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட மற்ற 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நீதிபதி வடமலை முன்னிலையில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. கொடநாடு கொலை வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன் இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : trial ,Kodanadu ,elections , Kodanadu trial intensified: Judgment before Assembly elections?
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...