×

நத்தத்தை ஏமாற்றிய நிவர், புரெவி புயல்: நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை

நத்தம்: நத்தம் பகுதியில் நிவர், புரெவி புயல் மழை போதிய அளவில் பெய்யாததால் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நத்தம் பகுதியில் அய்யா குளம், பீபீ குளம், காக்காகுளம், ஏழுமடை கண்மாய், தேவி குளம், பனங்குடி கண்மாய், கல்லுகட்டி குளம், சின்னமீரான் கண்மாய், செங்கணல் ஓடை, செட்டியார் குளம், நல்லாகுளம், கடம்பன் குளம், ஒட்டங்குண்டு குளம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் கனமழை பெய்யாமல் சாரல் மழையாக பெய்து விட்டு சென்றதால், கண்மாய்கள் நிரம்பாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

இதனால் கோடை காலங்களில் வெப்பத்தை தாங்க முடியாமல் வறட்சி மேலோங்கி, இப்பகுதியில் மா, தென்னை மரங்கள் ஆயிரக்கணக்கில் பட்டு போனதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். இந்த ஆண்டும் பருவமழை தொடக்கத்தில் அவ்வப்போது பெய்த மழைகளில் 2 நாட்கள் பெய்த மழை மட்டுமே சற்று கனமாக பெய்தது. அதன்பின் அவ்வப்போது சாரல் மழையாக பெய்து விட்டு சென்றது. கடந்த மாதம் நிவர், புரவி புயல்கள் அடுத்தடுத்து உருவாகி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழையாக பெய்து கண்மாய்கள் நிரம்பியதுடன் நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது.

ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் இந்த புயல்களால் போதிய மழை கூட பெய்யவில்லை. இதனால் சில கண்மாய்கள் வெட்டு வாய்கள் நிரம்பிய நிலையில், பெரும்பாலான கண்மாய் முழுமையாக நீரின்றி வறண்ட முகத்துடன் காட்சியளிக்கிறது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது, ‘கடந்த சில வருடங்களாக பெய்த மழையை காட்டிலும் இந்த ஆண்டு பெய்த பருவமழையானது சற்று கூடுதலாக பெய்தது. எனினும் அதிகமாக வறட்சியின் தாக்கம் காரணமாக கண்மாய்களில் நீர் நிரம்பவில்லை. மேலும் கனமழை என்று சொல்லும் அளவில் வெள்ள நீர் பெருக்கெடுத்தும் ஆறுகளில் நீர்வரத்து இல்லை.

வரும் கோடைகாலத்தில் வறட்சியின் தாக்கம் அதிகம் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும். அவ்வப்போது மழை தொடர்ந்து பெய்தால்தான் இப்போது பசுமையாக காணப்படும் மா, தொன்னை மரங்கள் தொடர்ந்து பசுமையை தக்க வைத்து பட்டு போகாமல் இருப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும்’ என்றார்.

Tags : storm ,Nivar ,Purevi , Snail deceived Nivar, Purevi storm: Farmers worried by unfilled eyelids
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...