பசுக்கள் குறித்து இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை...மத்தியமைச்சர் சஞ்சய் தோத்ரே தகவல்

டெல்லி: நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை ஏற்படுத்துவது தொடர்பாக யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் ஏஐயு ஆகியவற்றுடன் இணைந்து தேசிய இணைய கருத்தரங்கை தேசிய காமதேனு ஆயோக் ஏற்பாடு செய்தது.

அதில் காமதேனு இருக்கையை ஏற்படுத்தும்படி தேசிய காமதேனு ஆயோக் தலைவர் டாக்டர் வல்லபாய் கதிரியா வேண்டுகோள் விடுத்தார். நமது நாட்டு பசுக்களின் வேளாண், சுகாதார, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என டாக்டர் கதிரியா கூறினார். பசுக்கள் மற்றும் பஞ்சகவ்யங்களின் சாத்தியங்களை, அரசு தற்போது ஆராய தொடங்கியுள்ளது. நாட்டு பசு தொடர்பான அறிவியலை வெளிக்கொணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பசுக்களின் பயன்களை நவீன அறிவியல் அணுகுமுறையுடன் அறிவதற்கான தளம் மற்றும் ஆராய்ச்சியை நமது கல்வி முறை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கையை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே பாராட்டினார். இது குறித்து சஞ்சய் தோத்ரே கூறுகையில், நமது சமூகத்தில் பசுக்களின் பயன்களால் நாம் வளப்படுத்தப்பட்டோம். ஆனால் அந்நிய ஆட்சியாளர்களால் அவற்றை நாம் மறந்து விட்டோம். காமதேனு இருக்கையை ஆதரிக்கும் நேரம் வந்து விட்டது. சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் காமதேனு இருக்கையை அமைக்கும். பின்பு அதை மற்ற கல்வி நிறுவனங்களும் பின்பற்றும்.

ஆராய்ச்சி மற்றும் நடைமுறை செயல்படுத்துதலை தயாரிப்பு வடிவில் காட்டப்பட வேண்டும். டாக்டர் வல்லபாய் கதிரியா தலைமையில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார். ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ரபுதே கூறுகையில், தற்சார்பு கிராமங்கள் மூலம் தான், தற்சார்பு இந்தியா சாத்தியமாகும். புதிய மற்றும் மிளிரும் இந்தியாவுக்கு, நாம் பழங்கால அறிவுகளை புதிய தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டும். பசுக்கள் மூலமான வேளாண் பொருளாதாரம் மிகவும் அறிவியல்பூர்வமானது என்றார்.

Related Stories: