×

மொத்தமே 2048 விருதுதான் கொடுத்துருக்கு: 25,000 இந்திய ராணுவ வீரர்கள் சவுரிய சக்ரா விருதை திருப்பி அனுப்பியதாக வெளியான செய்தி பொய்: மத்திய அரசு விளக்கம்.!!!

டெல்லி: 25,000 இந்திய ராணுவ வீரர்கள் சவுரிய சக்ரா விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர் என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையை  இன்று 20வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளதால், பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு உள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற  வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.  வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப  வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 25000 இந்திய ராணுவ வீரர்கள் சவுரிய சக்ரா விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர் என பிரஜாசக்தி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மறுப்பு  தெரிவித்துள்ளது. இந்த செய்தி பொய் என்றும் 1956 முதல் 2019-ம் ஆண்டு வரை 2048 சவுரிய சக்ரா விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் வீரதீர செயலை  பாராட்டி வழங்கப்படும் 3வது பெரிய விருது சவுர்ய சக்ரா விருது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : soldiers ,Indian , A total of 2048 awards have been given: 25,000 Indian soldiers have returned the Sauriya Chakra award.
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி