ஐஐடியில் கொரோனா பரவல் எதிரொலி: அனைத்து கல்லூரி விடுதியிலும் காய்ச்சல் முகாம்...சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: ஐஐடியில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகள் திறக்கும்போது கொரோனா பாதிப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. கல்லூரி விடுதி அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் சென்னை ஐஐடியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஐடி வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணைஆணையர் ஆல்பின் ஜான்வர்கிஸ், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் சென்னை ஐஐடியில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சீரான இடைவெளியில் அனைத்து கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>