×

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமரை போல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் : பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுமி கடிதம்

லண்டன் : விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்,  20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல், சாலை மறியல், சுங்கச்சாவடி முற்றுகை, பாரத் பந்த், உண்ணாவிரதம் என ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து.வருகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறுபக்கம், டெல்லி விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இப்போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு தலைவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவரைத் தொடர்ந்து கனடா நாட்டு எம்பிக்கள், இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்கள் பலர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கனடாவாழ் இந்தியர்களுக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக அங்கு போராட்டங்களை நடத்தினர். இந்த ஆதரவு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. அங்கு வாழும் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டினைப் போல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கோரி லண்டனில் வசிக்கும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், நான் ஆஷ்லீன் கவுர் கில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வீடியோக்களை அனுப்பினேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. எனவே இன்று நான் 10 டவுனிங் தெருவுக்கு வந்து ஒரு குறுகிய வீடியோவை உருவாக்கியதுடன்,  என் கையால் எழுதப்பட்ட கடிதத்தை வழங்கினேன்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எங்களுக்கு ஆதரவு குரல் தரும்படி, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வலியுறுத்துங்கள்.. விவசாயிகளின் சார்பாக நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த வீடியோவைப் பகிரவும், முடிந்தவரை வைரலாகவும் செய்யவும். மற்றவர்கள் அனைவரும் முன் வந்து குறுகிய கிளிப்களை உருவாக்க நான் விரும்புகிறேன், இதன் மூலம் முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையைக் காண்பிப்போம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Delhi ,Canada ,United Kingdom , Delhi Farmers, Struggle, Prime Minister of Canada, UK, Prime Minister, Girl, Letter
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்