×

கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு!: ஆளும்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதல்.. இருக்கையில் இருந்து துணை சபாநாயகரை இழுத்து ஆவேசம்..!!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் பசுவதை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை மேலவை இருக்கையில் இருந்து துணை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த பாஜக அரசு மும்முரமாக முனைப்பு காட்டி வந்தது. கடந்த வாரம் கர்நாடக சட்டமன்றத்தில் கீழவையில் பசுவதை தடுப்பு சட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றியது. மேலவையில் பசுவதை தடுப்பு சட்டம் இதுவரை நிறைவேறாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மேலவையில் பசுவதை தடுப்பு சட்டத்தை இயற்ற  பாஜக அரசு, சிறப்பு அனுமதி பெற்று கூட்டியது. மேலவையில் கூட்டம் தொடங்கியவுடன் பாஜக மேலவை உறுப்பினர்கள் அனைவரும் மேலவை சபாநாயகரான கே.பிரதபச்சந்திர ஷெட்டிக்கு (காங்கிரஸ்) எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினரை உள்ளே விடாமல் பாஜக-வினர் தடுத்தி நிறுத்தினர். இந்நிலையில் துணை சபாநாயகராக எஸ்.எல். தர்ம கவுடாவை வைத்து  பசுவதை தடுப்பு சட்டத்தை இயற்ற பாஜக முயற்சி செய்தது. இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வாதம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் திடீரென காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள் அனைவரும் துணை சபாநாயகர் எஸ்.எல். தர்ம கவுடாவை இருக்கையில் இருந்து இழுத்து வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மேலவை உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜனநாயகத்திற்கு விரோதமாக துணை சபாநாயகரை வைத்து பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக நிறைவேற்ற முயற்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.


Tags : Karnataka ,Opposition ,Deputy Speaker , Karnataka, Cow Prevention Act, Ruling Party - Opposition, Conflict, Speaker
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!