மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 7.5% இடஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 7.5% இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் தொடர்ந்த வழக்கில்; கடந்த மூன்று முறை நான் நீட் தேர்வில் கலந்துகொண்டு 565 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கும் அரசாணை மூலம் தனது வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பதாகவும், 135 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட இடம் அளிக்கப்பட்டு இருப்பதால் அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், ஏற்கனவே 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பணம் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல மனுதாரர் கோரிக்கையை ஏற்று அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது என்றும், அரசு சார்பில் பதிலளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் குறுக்கிட்டு,  7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்ற 405 மாணவர் சேர்க்கை நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட கோரிக்கை வைத்தனர். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories:

>