வெ.இண்டீசுக்கு மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நியூசி.

வெலிங்டன், டிச. 15: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச... நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஹென்றி நிக்கோல்ஸ் அதிகபட்சமாக 174 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது.329 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 60 ரன், ஜோஷுவா டா சில்வா 25 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஹோல்டர் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து சவுத்தீ வேகத்தில் கிளீன் போல்டானார். அல்ஜாரி ஜோசப் 24 ரன்னில் வெளியேற, அறிமுக வீரர் ஜோஷுவா அரை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 57 ரன் எடுத்து வேக்னர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். கேப்ரியல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 317 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (79.1 ஓவர்). கெமார் ஹோல்டர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. தரப்பில் போல்ட், வேக்னர் தலா 3, சவுத்தீ, ஜேமிசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹென்றி நிகோல்ஸ் ஆட்ட நாயகன் விருதும், கைல் ஜேமிசன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இத்தொடரில் தொடர்ச்சியாக 2 இன்னிங்ஸ் வெற்றிகளைப் பதிவு செய்த நியூசிலாந்து 120 புள்ளிகளை அள்ளியது. இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி தக்கவைத்துள்ளது.

Related Stories:

>