×

நாய்களும் குழந்தைகள்தான் !

நன்றி குங்குமம் தோழி

டிப்ஸ் தருகிறார் உலகின் டாப் மோஸ்ட் பயிற்சியாளர்

பாம்புக்கு அடுத்து நாம் பார்த்து பயப்படும் மிருகம் நாய்தான். வீட்டு கேட்டில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற போர்டை பார்த்தவுடன் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாவது இயற்கை. அதே போல் ‘அந்த தெருவில் நாய் தொல்லை அதிகம். அதனால் இரவு நேரத்தில் தனியே நடந்து செல்வதில்லை...’ என்று மற்றவர் சொல்ல கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், உண்மை இதற்கு எதிரானது. நாய்களை நமக்கு ஏற்ப பழகினால், அது குழந்தை போல் நம் காலை சுற்றிக் கொண்டு வரும் என்கிறார் ஷெரின் மெர்சென்ட். இவர் கடந்த 18 வருடங்களாக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்தியாவில் நாய்களுக்கான நடத்தை ஆலோசகரில் இவரும் ஒருவர் என்பது மட்டுமல்ல... இவரே அதற்கு முன்னோடியும் கூட. ‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில். எங்க வீட்டில் எல்லோரும் நாய் பிரியர்கள். எங்களை போல் அதுவும் வீட்டில் ஒரு உறுப்பினர் என்று சொல்லலாம். சின்ன வயசில் இருந்தே நாய்களுடன் பழகியதால், எனக்கு நாய் மீது பயம் ஏற்பட்டதில்லை. எங்க வீட்டில் இருக்கும் நாய்கள் நாங்க என்ன சொல்றோமோ அதன்படி நடக்கும். அந்த சமயத்தில்தான் உலகின் மிகப் பிரபலமான நாய் பயிற்சியாளர் ஜான் ரோஜர்சன் மும்பைக்கு வந்திருப்பது தெரியவந்தது.

இரண்டு நாட்கள் நாய்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப் நடத்தினார். எனக்கு நாய் மேல் பிரியம் அதிகம் என்பதால் கலந்து கொண்டேன். அங்கு அவர் பயிற்சி அளிக்கும் விதத்தை பார்த்து பிரமித்துப் போனேன். பொதுவாக நாய்களுக்கு பயிற்சி அளிப்பவர் எப்போதும் கையில் குச்சி வைத்துக் கொண்டுதான் பயிற்சி அளிப்பார்கள். அடிக்கு பயந்து நாயும் அவர் சொல்படி கேட்கும். ஆனால், ஜான் கையில் குச்சி இல்லை. அதே சமயம் அவர் கட்டளைக்கு அந்த ஜீவன் எவ்வித தயக்கமும் இல்லாமல் அடிபணிந்தது.

அவரிடம் இது குறித்து கேட்டேன். ‘எந்த ஓர் உயிரினமும் அன்புக்கு அடிபணியும். அதையே நானும் கடைப்பிடிக்கிறேன்’ என்றார். அவர் பயிற்சி அளிக்கும் விதம் என்னை கவர்ந்தது. அவரிடம் முறையாக பயிற்சி எடுக்க விரும்பினேன். இதை அறிந்த என் பெற்றோர், முதலில் தயங்கினார்கள். பிறகு சம்மதித்தார்கள். ஜான் வசிப்பது இங்கிலாந்தில். எனவே, நானும் இங்கிலாந்துக்கு பறந்தேன். நான்கு வருடங்கள் அவரிடம் பயிற்சி பெற்றேன். நாய்களின் குணாதிசயங்களையும் பயிற்சி முறைகளையும் கற்க இரண்டு மாதங்கள் போதும். என்றாலும், நான் நான்கு வருடங்கள் அவருடன் இணைந்து இங்கிலாந்தில் நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தேன்.

இடையிடையே இந்தியாவுக்கு வருவேன். பயிற்சி அளிப்பேன். மும்பைக்கு வந்த பிறகு ‘கேனைன் கேன் கேர்’ பயிற்சி மையத்தை தொடங்கினேன். இங்கு நாய் பயிற்சியாளர்களாக விரும்புபவர்களுக்கும், வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கும் பயிற்சி அளிக்கி றோம்...’’ என்று சொல்லும் ஷெரின் மெர்சென்ட், முதன் முதலில் ஒரு குட்டி லாப்ரடார் நாய்க்கு பயிற்சி அளித்துள்ளார். ‘‘நாய்களும் குழந்தைகள் போல்தான். சிறுவயதிலேயே அவற்றை பழக்கிவிட்டால், வளர்ந்த பிறகு ஒழுங்காக செயல்படும். குட்டி பிறந்த இரண்டு மாதத்திலிருந்தே பயிற்சி அளிக்கலாம். வளர்ந்த நாய் என்றால், பயிற்சி அளிப்பது கொஞ்சம் கஷ்டம்.

காரணம் அதன் குணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அதற்கு பயிற்சியை தொடங்க வேண்டும். குழந்தையாக இருக்கும்போதே நல்ல பழக்கவழக்கங்களை சொல்லித் தருகிறோம் இல்லையா... அப்படி நாயையும் பழக்கலாம். பலருக்கு இது புரிவதில்லை. அழகுக்காக நாயை வாங்கி விடுவார்கள். அதன் பிறகு அதை சரியாக கவனிக்க மாட்டார்கள். எனவே அது ‘ரவுடி’யாக மாறும். மற்றவர்களை கடிக்கவும் தொடங்கும். பொதுவாக நான் நாய் வளர்ப்பவர்களிடம் ஒரு விஷயத்தை சொல்லி விடுவேன். ஒரு வேலையை நாய் செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...

அதை சரியாக அது செய்தால், உடனே அதற்கொரு பரிசு கொடுங்கள். பிடித்த உணவோ அல்லது செல்லமாக தட்டிக் கொடுப்பதோ அல்லது ‘குட்பாய்’ என்றோ. இப்படி செய்தால், அந்த செயல் நாயின் மூளையில் பதிந்துவிடும். வேலை செய்தால், எஜமானர் பாராட்டுவார் என்பதை அது உணர்ந்து கொள்ளும். அடுத்தடுத்து எதிர்பார்க்கவும் செய்யும். அதை நாம் பூர்த்தி செய்தால், நம் பேச்சுக்கு கட்டுப்படும். நான் சொல்ல வருவது இதுதான். குச்சியை காட்டி மிரட்டாமல் அன்பு காட்டுங்கள். மனம் திறந்து பாராட்டுங்கள். அதேபோல் கழிப்பறை பயிற்சி, மற்ற நாய்கள் அல்லது மக்களை பார்த்தால் குரைப்பது,

வீட்டில் வருபவர்கள் மேல் கடிப்பது போல் பாய்ந்து குதிப்பது, யாரும் இல்லாத போது வீட்டில் உள்ள பொருட்களை நாசம் செய்வது... இவற்றை எல்லாம் எப்படி தடுப்பது என பலரும் கேட்கிறார்கள். இவை அனைத்துக்கும் முறையான பயிற்சி உண்டு என்பதே என் பதில். பத்து முறை நாயை சிறுநீர் கழிக்க வெளியே அழைத்து சென்றால், அதற்கு பழகிடும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றும் போது நமக்கு சிக்னல் கொடுக்கும். நாய்கள் பேசாது. ஆனால், நாம் சொல்வதையும், நம்முடைய சிக்னல்களையும் அவை புரிந்து கொள்ளும்.

அதேபோல் அதனுடன் நாம் பழகும் போது நமக்கும் அதன் மொழி புரியும். வால் ஆட்டுவதும், வெவ்வேறு அலைவரிசையில் குரைப்பதும் கூட அதன் மொழிகள்தான். ஒருமுறை இரண்டு வயது நாய்க் குட்டிக்கு பயிற்சி அளிக்க சொல்லி அதன் உரிமையாளர் கேட்டார். வயதுக்கு மீறிய ஆக்ரோஷத்துடன் அது இருந்தது. இரண்டு வாரம் அதற்கு சிறப்பு பயிற்சி அளித்தேன். அந்த நாய்க்குட்டியின் பின்புலம் பற்றி கேட்ட போது, அம்மாவால் கைவிடப்பட்ட குட்டி அது என்று தெரிய வந்தது. அம்மாவால் புறக்கணிக்கப்பட்ட வலியே அதன் ஆக்ரோஷத்துக்கு காரணம்.

அதன் மனப்பான்மையை மாற்றி, ‘இப்போது புது வீடு கிடைத்திருக்கிறது... இந்த உரிமையாளர்கள் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்’ என்று பலவிதமான நடவடிக்கைகள் மூலம் அதற்கு புரிய வைத்தோம். இப்போது அந்த குட்டி ‘சமத்தாக’ இருக்கிறது. ஒரு நாயை பயில வைக்கும் போது, ‘நான் உன் நண்பன்’ என்பதைத்தான் முதலில் புரிய வைப்பேன். இது வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். நாயை கயிற்றில் கட்டிப் போட்டோ அல்லது அடித்தோ அதை நம் வழிக்கு கொண்டு வர முடியாது. மாறாக அதனிடம் அன்பு செலுத்தியே...

அதனுடன் நம் உறவை பலப்படுத்தியே நம் வழிக்கு கொண்டு வர முடியும்...’’ என்று சொல்லும் ஷெரின் மெர்சென்ட், இப்படி நாய்களுக்கு பயிற்சி அளிப்பதே தன் தொழிலாக அமையும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையாம். ‘‘சிறு வயது முதலே எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நாய்களை நினைத்து வந்தேனே தவிர, அவற்றுக்கு பயிற்சி அளிப்பதே என் வாழ்க்கையாக அமையும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. எப்போது நாய்க்கும் பயிற்சி அவசியம் என்று தெரிய வந்ததோ, அப்போதே அது என்னுடைய தொழிலாக மாறியது.

மும்பை, பெங்களூர், சென்னை தவிர, இலங்கை, இங்கிலாந்து என பல நாடுகளுக்கும் சென்று இப்போது நாய்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன். நிறைய இளைஞர்கள் இப்போது என்னிடம் முறையாக பயிற்சி பெறுகிறார்கள். வெளிநாடுகளிலும் இது தொடர்பாக வேலை பார்த்து வருகிறார்கள். வீட்டு நாய்கள் தவிர, போலீஸ் துறையில் மோப்பம் பிடிக்க பயன்படும் நாய்களுக்கும், வெடிகுண்டுகளை கண்டறிய சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். எல்லாவற்றையும் விட வயதானவர்களுக்கு உதவி செய்ய நாய்களை பழக்குகிறோம்.

சிலரால் நடக்க முடியாது. சக்கர நாற்காலியில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகளை மற்றும் பேப்பர் எடுத்து வருவது, டி.வி ரிமோட் கொடுப்பது, உதவிக்கு ஆட்களை அழைப்பது மாதிரியான பணிகளை, நாய்கள் செய்து கொடுக்கும்...’’ என்று சொல்லும் ஷெரின் மெர்சென்ட், ‘வுஃப்! த மேக் வித் எ வாக்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார்.‘‘நாய்களுக்கான பத்திரிகையில் பொதுவாக அதன் வகைகள்,

விலைப் பட்டியல் ஆகிய விவரங்கள்தான் இருக் கின்றன. எங்கள் இதழ் அப்படியில்லை. நாய் வளர்ப்பவர்களுக்கு உதவும் வகையிலேயே பத்திரிகையை நடத்துகிறோம். இதற்கு லிம்கா விருதும் கிடைத்துள்ளது...’’ என்று சொல்லும் ஷெரின் மெர்சென்ட், இங்கிலாந்தில் உள்ள கென்னல் கிளப்பின் அங்கீகார திட்டத்தின் அடிப்படையில் நாய்களுக்கான நடத்தை பயிற்சியாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளார். அந்த வகையில் உலகிலுள்ள ஒன்பது பேர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ப்ரியா

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...