13 ஆயிரம் கோடி கேட்டு போராட்டம் கெஜ்ரிவால் வீட்டில் பொருத்திய சிசிடிவி கேமராக்கள் உடைப்பு: பா.ஜ தலைவர்கள் ஆவேசம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களை பா.ஜ தலைவர்கள் உடைக்கும் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஆம்ஆத்மி அரசுக்கும், பா.ஜ மேயர்கள் கொண்ட 3 மாநகராட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி வழங்க கேட்டு ஒருவாரமாக பா.ஜ மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் முதல்வர் கெஜ்ரிவால் வீட்டு முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆம்ஆத்மிக்கும், பா.ஜவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை பா.ஜ தலைவர்கள் உடைக்கும் வீடியோ வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ் கூறுகையில்,’ சில பெண் கவுன்சிலர்கள் ஆம்ஆத்மி அரசால் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை உடைத்தார்கள். தங்கள் தனிப்பட்ட நலனுக்காக இதை செய்தார்கள்’ என்றார்.

ஆனால் வைலான வீடியோவில் முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் அங்கு காம்பவுண்ட் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கினர். இந்த காட்சி பல சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி ஆம்ஆத்மி அரசு கூறுகையில் டெல்லி முதல்வர் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் பா.ஜ தலைவர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டனர். ஆனால் இதை பா.ஜ தலைவர்கள் மறுத்துள்ளனர். ஆம்ஆத்மி அரசுக்கு எதிராக மேயர்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் இதுபோன்ற நாடக குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி பா.ஜ பொதுச்செயலாளர் ஹர்ஷ் மல்கோத்ரா கூறுகையில்,’ பா.ஜ பெண் தலைவர்கள் தூங்கும் பகுதியில் சில சிசிடிவி கேமராக்கள் புதியதாக பொருத்தப்பட்டு இருந்தன. இது பெண்களுக்கு எதிரான செயல் இல்லையா?.

ஏன் பெண்கள் தர்ணா மேற்கொண்ட பகுதியில் இதுபோன்ற கேமராக்கள் பொருத்தப்பட்ட என்பதற்கு முதல்வர் கெஜ்ரிவால் விளக்கம் கொடுப்பாரா?. முன்பு 4 கேமராக்கள் மட்டுமே இருந்தன. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதன்பின் 12 கேமராக்கள் அவசரமாக பொருத்தப்பட்டன. அதுவும் பெண் தலைவர்கள் இருக்கும் பகுதியில் பொருத்த வேண்டிய அவசியம் என்ன?. எனவே இதில் ஒன்றும் இல்லை. கெஜ்ரிவால் சார்பில் இன்னொரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது’ என்றார்.  வடக்கு டெல்லி மேயர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ‘ பெண் கவுன்சிலர்கள் எங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தனிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கேமராக்களை அவர்கள் உடைத்தார்கள். பழைய கேமராக்களை யாரும் தொடவில்லை. இதுபோன்ற போராட்டத்தை நாங்கள் தொடர விரும்பவில்லை. எங்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இங்கு இல்லை’ என்றார்.

Related Stories:

>