×

ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் எல்லை கடத்தப்படுவர்: தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

பெங்களூரு: கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் எல்லை கடத்தப்படுவார்கள் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் பசவராஜ் எச்சரித்துள்ளார்.  மாநிலத்தில் காலியாக இருக்கும் 5 ஆயிரத்து 742 கிராம பஞ்சாயத்துகளுக்கு இரு கட்டங்களாக வரும் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.   இதனிடையில் பல கிராமங்களில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ₹50 ஆயிரம் முதல் 1.50 கோடி வரை ஏலம் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. பஞ்சாயத்து உறுப்பினர் ஏலம் விடுவது தேர்தல் ஜனநாயகப்படி சட்ட விரோதம் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் அதை கண்டுக்கொள்ளாமல் துமகூரு, கோலார், சித்ரதுர்கா, சிக்கபள்ளாபுரா, கலபுர்கி, பீதர், மண்டியா, பல்லாரி, யாதகிரி, ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமாகவும் பிற மாவட்டங்களில் உள்ள ஓரிரு கிராமங்களிலும் உறுப்பினர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.   கிராம பஞ்சாயத்து தேர்தலில் உறுப்பினர் தேர்ந்தெடுப்பது புதியதல்ல.

கடந்த தேர்தல்களிலும் இதுபோல் நடந்துள்ளது. ஆனால் அவைகளை பகிரங்கப்படுத்த சமூகவலைத்தள வசதிகள் இல்லாததால் அவ்வளவாக தெரியவில்லை. தற்போது நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்கள் குக்கிராமங்களிலும் பயன்படுத்துவதால், பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஏலம் விடுவது உடனுக்குடன் சமூகவலைத்தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் உள்பட பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள விவரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. ஏலம் எடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை அடையாளம் கண்டு உடனடியாக எல்லை கடத்த வேண்டும். தேர்தல் முடிந்தபின், அவர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யப்பட  வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பசவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : panchayat members ,Election Commission , Bidding panchayat members to be deported: Election Commission issues stern warning
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...